ஸ்ரீநகர்,
காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தில் உள்ள பசந்த்நகர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், அங்கிருக்கும் மற்றொரு பயங்கரவாதியை பிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் கடந்த 6 மாதங்களில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினரிடையே 6-க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் ஏப்ரல் 28-ந்தேதி ஒரு கிராம பாதுகாப்பு காவலரும், ஆகஸ்ட் 19-ந்தேதி ஒரு சி.ஆர்.பி.எப். இன்ஸ்பெக்டரும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.