விமான நிலையத்தை அதானி நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட எதிர்ப்பு – நைரோபியில் விமான சேவை பாதிப்பு

நைரோபி,

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனத்திற்கு வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுபாதை மற்றும் புதிய பயணிகள் முனையத்தை மேம்படுத்தவும், விமான நிலையத்தில் உள்ள வசதிகளை புதுப்பிக்கவும் அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், இந்த ஒப்பந்தத்திற்கு கென்யாவில் உள்ள விமான நிலைய பணியாளர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் தொழிலாளர் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த ஒப்பந்தம் தங்கள் நாட்டு மக்களுக்கு பயனளிக்காது என்றும், தங்கள் வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அதே சமயம், தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி இந்த ஒப்பந்தத்திற்கு கென்யாவின் ஜனாதிபதி வில்லியம் ருட்டோ ஆதரவு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், விமான நிலையத்தை அதானி நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோமோ கென்யாட்டா விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று இரவு தொடங்கிய இந்த போராட்டம் காரணமாக நைரோபியில் விமான சேவை பாதிக்கப்பட்டது. விமானங்கள் தாமதமானதால் பயணிகள் நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. ஜோமோ கென்யாட்டா விமான நிலையம் ஒரு மணி நேரத்தில் 35 விமானங்களை கையாளும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.