பதேர்வாஹ் (ஜம்மு): எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) ஐஜி டி.கே.போரா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆறு மாவட்டங்களுடன் சேர்ந்து தெற்கு காஷ்மீர் மற்றும் ஜம்முவின் செனாப் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள மொத்தம் 24 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 18-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. ஜம்முகாஷ்மீரில் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வதில் பிஎஸ்எப் துணைநிற்கும். எந்தவொரு சூழ்நிலையும் சமாளிக்க தயாராக உள்ளோம்.
தேர்தலில் தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்க எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடினமான நிலப்பரப்பான செனாப் பள்ளத்தாக்கில் பிஎஸ்எப் வீரர்கள் அனுப்பப்பட்டு தீவிரவாதிகளின் நடமாட்டம் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, தேர்தல் நேரத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களுக்கும் இடமிருக்காது.
தீவிரவாதிகள் அதிக எண்ணிக்கையில் இல்லை. இருப்பினும், பரந்த வனப்பகுதி அவர்களுக்கு சாதகமாக உள்ளது. நிலப்பகுதியில் அடிக்கடி தாக்குதல் நடத்திவிட்டு வனப் பகுதியில் அவர்கள் எளிதில் மறைந்து கொள்கின்றனர். அவர்களை தேடிப்பிடிக்கும் கடினமான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். தீவிரவாதம் எந்த வடிவத்தில் தலைதூக்கினாலும் அதனை தடுப்பதற்கு தயார் நிலையில் இருக்கிறோம். இவ்வாறு போரா தெரிவித்தார்.