பெங்களூரு: இந்திய அறிவியல் கழகத்தின் (ஐஐஎஸ்சி) விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்பேஸ்ஃபீல்ட், நாட்டின் முதல் ஏரோஸ்பைக் ராக்கெட் இன்ஜின் ஹாட்-ஃபயர் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
168 மிமீ ராக்கெட் மோட்டாருக்கான இந்த நிலையான-சோதனை பெங்களூருவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் ஐஐஎஸ்சி-யின் செல்லகெரே வளாகத்தில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் ப்ரப்பல்ஷன் சோதனை தளத்தில் நடைபெற்றது. இதுகுறித்து ஸ்பேஸ்ஃபீல்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான அபுர்வா மசூக் கூறுகையில், “இந்த சோதனையானது 11 பார் அதிகபட்ச பதிவு செய்யப்பட்ட அழுத்தத்தையும், 2000 என் உச்ச உந்துதலையும் அடைந்தது. இது, மிகவும் ஈர்க்கக்கூடிய முடிவுகளை அளித்துள்ளது. அதன்படி, எச்டிபிபிஅடிப்படையிலான கலப்பு உந்துசக்தியை பயன்படுத்தி செய்யப்பட்ட இந்த சோதனையின்போது உருவாக்கப்பட்ட மொத்த உந்துதல் 54,485.9என்-ஐ எட்டியது” என்றார். இந்த வெற்றிகரமான ராக்கெட் இன்ஜின் சோதனை எதிர்காலத்தில் மிகவும் திறமையான மற்றும் செலவு குறைந்த விண்வெளி ஏவுதள அமைப்புகளுக்கு வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது.