தமிழ் சினிமாவில் சாமானிய மக்களின் கதைகளையும், உணர்வுகளையும் கச்சிதமாகப் படம் எடுக்கும் சீனு ராமசாமியின் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘கோழிபண்ணை செல்லதுரை’.
ஏகன், யோகிபாபு, சாகாய பிரிகிடா, லியோ சிவக்குமார், சத்யா உள்ளிட்ட சிலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ‘கோழிப் பண்ணை செல்லதுரை’ திரைப்படம் அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில், வரும் 18ஆம் தேதி திரையிடப்படுகிறது. இங்கு வரும் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய இயக்குநர் சீனு ராமசாமி, “சினிமாவின் வளர்ச்சிக்கு எது தேவை என்பதை நான் சிந்தித்துக்கொண்டே இருப்பேன்.
ஒரு படம் வெளியாகும். அதை மக்கள் பார்ப்பார்கள் பின் அப்படத்தை மறந்துவிடுவார்கள். அப்போது சினிமா என்பது வெறும் வணிகம் மட்டும்தானா? இந்தக் கேள்வி எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்துகொண்டு இருக்கிறது. இதற்கு நாம் என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது எனக்குத் தெரிந்தது எல்லாம் என் மண், ஊர், நான் வாழ்ந்த வாழ்க்கை இதைக் காண்பிக்க வேண்டும் என்று நினைத்தேன். சினிமா ஒரு மாற்றத்தை சந்திக்க வேண்டும் என்றால் முதலில் படத்திற்கு இடையே போடும் இன்டர்வெல்லை நீக்க வேண்டும்.
சினிமா என்பது ஒரு முழு உடல், முழு தரிசனம் அப்படி ஒரு முழு தரிசனம் இந்த ‘கோழிபண்ணை செல்லதுரை’ படத்தில் கிடைக்கும். இந்தப் படத்தின் ஹீரோவான ஏகன் முழு திறமையோடு என்னிடம் வந்தவர். அதனால் அவரைத் தேர்ந்தெடுத்தேன். என்னுடைய படப்பிடிப்பில் யாரையும் பதற வைக்க மாட்டேன். திட்ட மாட்டேன். நிறைய நடிகர்கள் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
யாராவது வாழ்க்கையில் நான் தோற்றுவிட்டேன், இந்த வாழ்க்கை என்னை கைவிட்டுவிட்டது. எனக்கென்று யாருமில்லை என நினைத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கான ஒரு செய்தி இந்தப்படத்தில் இருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் எந்த ஒரு மனிதனையும் கைவிடுவதில்லை. இந்தப் படத்தில் பெரிய உழைப்பு இருக்கிறது. இந்தப் படம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது” என்று பேசியிருக்கிறார்.