புதுச்சேரி: புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த நேபாளத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஆட்டோவில் தவறவிட்ட விலையுயர்ந்த ஆப்பிள் செல்போனை, ஆட்டோ ஓட்டுநர்கள் அவர் புறப்பட்டுச் சென்ற பேருந்தை தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி செட்டித்தெரு – மிஷின் வீதி சந்திப்பில் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இங்குள்ள ஓட்டுநர் சீனிவாசனின் ஆட்டோவில் வந்த நேபாளத்தைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர், தனது கையில் வைத்திருந்த ஆப்பிள் செல்போனை மறந்து போய் ஆட்டோவிலேயே விட்டுவிட்டு இறங்கிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், தனது ஆட்டோவின் பின்னிருக்கையில் ஆப்பிள் செல்போன் இருப்பதை எதார்த்தமாக கவனித்த ஆட்டோ ஓட்டுநர் சீனிவாசன், உடனே அந்தப் பயணியை இறக்கிவிட்ட தங்கும் விடுதிக்குச் சென்றுள்ளார். ஆனால், அந்தச் சுற்றுலா பயணி அங்கு இல்லை. இதையடுத்து தங்கும் விடுதியில் அவர் தந்திருந்த செல்போன் எண்களைத் தொடர்பு கொண்டு பேசிய சீனிவாசன், தனது ஆட்டோவில் ஆப்பிள் போனை விட்டுச் சென்ற விவரத்தை அந்தப் பெண்ணிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அந்தப் பெண், தான் ஊருக்கு புறப்பட்டுவிட்டதாகவும் தான் பயணிக்கும் பேருந்து ஈசிஆரில் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஆப்பிள் செல்போனை ஒப்படைக்க, தான் வந்து கொண்டிருப்பதாக சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதையடுத்து சக ஆட்டோ ஓட்டுநர்கள் சிலருடன் சிவாஜி சிலை பகுதிக்குச் சென்ற சீனிவாசன், அந்த இடத்தில் நேபாள பெண் சுற்றுலா பயணி சென்று கொண்டிருந்த பேருந்தை நிறுத்தி அந்தப் பெண்ணிடம் அவரது செல்போனை ஒப்படைத்தார். செல்போனை பெற்றுக்கொண்ட அந்தப் பெண் சீனிவாசனுக்கு நெஞ்சார நன்றி தெரிவித்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
தவறவிட்ட ஆப்பிள் போனை திரும்ப ஒப்படைக்கும் முயற்சியில் சீனிவாசனுடன் இணைந்து செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், “எங்களுக்கு அந்த பெண்ணின் பெயர் கூட சரியாக தெரியவில்லை தவற விட்ட பொருளை ஒப்படைப்பதை மட்டுமே நாங்கள் பெரிதாக நினைத்தோம்” என்றனர். இந்தச் சம்பவங்களை வீடியோ எடுத்த சக ஆட்டோ ஓட்டுநர்கள் அதை இணையத்தில் பதிவிட்டதையடுத்து, பலரும் சீனிவாசன் உள்ளிட்ட ஆட்டோ ஓட்டுநர்களின் சேவைக்கு பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள்.