70 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்க நேற்று நடந்த மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவின் கீழ், இந்த இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த திட்டம் வருமானம் அடிப்படையில் அமையாது. அதாவது 70 வயதிற்கு மேல் உள்ளவர்களை கொண்ட குடும்பத்தின் வருமானம் எவ்வளவாக இருந்தாலும், இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இருக்கும் குடும்பத்தில் 70 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இருந்தால், 70 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கென ரூ.5 லட்ச மருத்துவக் காப்பீடு டாப் அப் வழங்கப்படும். இந்தக் டாப் அப்பில் குடும்பத்தில் இருக்கும் வேறு நபர்கள் பயன்பெற முடியாது.
தனியார் மருத்துவக் காப்பீடு உள்ள பெரியவர்கள் கூட இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
வேறு அரசு மருத்துவக் காப்பீடு திட்டம் ஏதாவது வைத்திருந்தால், எந்த திட்டம் வேண்டும் என்பதை முன்னரே முடிவு செய்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் 70 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தனி மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டம் மூலம் 6 கோடி பேரும், 4.5 கோடி குடும்பங்களும் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.