ஸ்பேம் கால்களை கட்டுப்படுத்த… ஏர்டெல் CEO எழுதிய முக்கிய கடிதம்

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India – TRAI) வியாபார நோக்கில் செய்யப்படும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு முடிவு கட்ட புதிய விதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளாதாக தகவல்கள் வெளியானது. பயனர்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் ஸ்பேம் அழைப்புகளை மேற்கொள்ள தொலைபேசி இணைப்புகளை தவறாக பயன்படுத்துவதை கண்காணித்து தடுப்பதே இதன் நோக்கம்.

புதிய விதிகளின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்கில் இருந்து மேற்கொள்ளப்படும் ஸ்பேம் அழைப்புகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர் ஸ்பேம் அழைப்புகள் பெற்றது குறித்து புகார் அளித்தால், தொலைத்தொடர்பு நிறுவனம் சிக்கலைத் தீர்த்க்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விதிகளை மீறும் சிம்கார்டுகளை முடக்க வேண்டும் என்றும் TRAI கூறியுள்ளது.

மோசடி அல்லது ஸ்பேம் அழைப்புகளை மேற்கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று TRAI எச்சரித்துள்ள நிலையில், இது தொடர்பாக ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் மற்றும் டாடா தொலைத் தொடர்பு நிறுவன தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில், வணிக ரீதியாக மேற்கொள்ளப்படும் ஸ்பேம் அழைப்புக்கு (Spam Calls) பயன்படுத்தப்படும் கார்ப்பரேட் இணைப்புகள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள ஒரு கூட்டு அமைப்பை உருவாக்க வேண்டும் என ஏர்டெல் சிஇஓ விட்டல் முன்மொழிந்துள்ளார். 

“நாங்கள் இதற்கான முதல் நடவடிக்கையை எடுத்து, ஸ்பேம் கால்கள் தொடர்பான தரவை (நிறுவனத்தின் பெயர் மற்றும் செயல்பாட்டில் உள்ள எண் மட்டும்) மாதாந்திர அடிப்படையில் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறோம், இதனை பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் செய்வதை வரவேற்கிறோம்” என்று விட்டல் கடிதத்தில் கூறினார். இந்த கடிதம் ரிலையன்ஸ் ஜியோ எம்டி பங்கஜ் பவர், வோடபோன் ஐடியா சிஇஓ அக்ஷய் முந்த்ரா, பிஎஸ்என்எல் சிஎம்டி ராபர்ட் ரவி மற்றும் டாடா டெலிசர்வீசஸ் எம்டி ஹர்ஜீத் சிங் சவுகான் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

“ஸ்பேம் கால்கள் சிக்கலை தீர்க்க, தனியாக மேற்கொள்ளும் முயற்சியை விட அனைத்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களின் கூட்டு முயற்சி மட்டுமே சிறந்த பலனை அளிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என ஏர்டெல் சிஇஓ விட்டல் கூறினார்.

இந்தியாவில் அதிகரித்து வரும் ஸ்பேம் மற்றும் ஃபிஷிங் செய்திகள் குறித்த தரவுகள் இந்தியாவில் தினமும் 1.5 – 1.7 பில்லியன் வணிக ரீதியாக அனுப்பப்படும் ஸ்பேம் செய்திகள் அனுப்பப்படுகின்றன என்றும், ஒவ்வொரு மாதமும் இந்த அளவு மொத்தம் 55 பில்லியனை எட்டும் எனவும் தெரிவிக்கின்றன. நிதிச் சேவைகள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதில அளவில் ஸ்பேம் செய்திகளை அனுப்புவதாக தகவல்கள் பதிவாகியுள்ளன. மற்றொரு கணக்கெடுப்பில், 76% நுகர்வோர்களுக்கு தினமும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்பேம் செய்திகள் வருவதாகக் கூறியுள்ளனர். எண்களை பிளாக் செய்வதால், எந்த பயனும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.