இணையவழி ஆட்சேர்ப்பு காரணமாக அரசாங்கத்திற்கு 100 இலட்சம் ரூபாய் இலாபம்..

இவ்வருடம் கல்வியற் கல்லூரி மாணவர்களை இணையவழி ஊடாக ஆட்சேர்ப்பு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் பத்து மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்..

கல்வியற் கல்லூரி மாணவர்களை ஆட்சேர்ப்பதற்காக இதற்கு முன்னர் 13.5 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இம்முறை அதற்காக 3.5 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டது. இதனால் அரசாங்கத்திற்கு 10 மில்லியன் ரூபாவை சேமிக்க முடிந்ததாக தெரிவித்தார்.
பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு இதற்கு முன்னர், ஒன்றரை முதல் இரண்டு வருடங்கள் வரை எடுத்தன. இம்முறை 04 மாதங்களில் மிகக் குறுகிய காலத்தில் ஆட்சேர்ப்பை வினைத்திறனுடன் மேற்கொள்ள முடிந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவை மற்றும் சட்டமா அதிபரின்; அனுமதியுடன் இந்த பணிக்கான முழு தொழில்நுட்ப ஆதரவையும் இன்போர்மடிக் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (information institute of Technology) வழங்கியுள்ளது.

இங்கு கல்விப் பல்கலைக்கழகம் ஸ்தாபிப்பது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், 19 கல்வியற் கல்லூரிகளையும் இணைத்து கல்விப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இறுதி வரைவு சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அடுத்த வாரத்தில் அதற்கான தீர்வு கிடைக்கும். பின்னர், அது தொடர்பான விடயம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.