‘கோட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சினிமாவில் உச்ச நட்சத்திரத்துடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் நடிகராக அதே உச்ச நட்சத்திரத்துடன் களமிறங்குவதெல்லாம் அரிதிலும் அரிதான ஒன்று. ஆனால், அந்த விஷயத்தை சாத்தியப்படுத்தியிருக்கிறார் மலாய் நடிகர் இர்பான் சைனி. ‘குருவி’ படத்தில் த்ரிஷாவின் அண்ணன் மகனாக நடித்து அறிமுகமான அவர் மலாய் நடிகராக மலேசியாவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மீண்டும் ‘கோட்’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார். அவரை தொடர்புக் கொண்டு பேசினோம்.
“நான் இப்போ நடிச்சிட்டுதான் இருக்கேன். நான் இதுவரைக்கும் படம் வெப் சீரிஸ்னு 25 ப்ராஜெக்ட் பண்ணிட்டேன். ஆனா நான் மலாய் மொழியிலையும், தமிழ் மொழியிலையும் நடிக்கிற படங்கள் மலேசியாவுல மட்டும்தான் வெளியாகும். அதுனால அந்த படங்களையெல்லாம் நீங்க பார்த்திருக்கமாட்டீங்க. சில படங்கள் மட்டும்தான் நெட்பிளிக்ஸ்ல வெளியாகும். தமிழ்ல நடிச்சா இங்கையும் நான் அடையாளப்படுத்தப்படுவேன். அதே சமயம் மலேசியாவிலையும் அடையாளப்படுத்தப்படுவேன். விஜய் அண்ணன் மூலமாகதான் சினிமாவுல அறிமுகமானேன். திரும்ப அவர் படத்துல இருந்தே தமிழ் பயணத்தை தொடரணும்னு ஆசைப்பட்டேன்.
மாஸ்டர், பீஸ்ட், லியோ படங்கள்ல நடிக்கிறதுக்கு முயற்சிகள் பண்ணினேன். ஆனா தவறான ஏஜென்சி மூலமாக போனதுனால ஏமாந்துட்டேன். இப்போ ‘கோட்’ திரைப்படம் சரியாக அமைஞ்சிருக்கு. ‘குருவி’ படம் எனக்கு வந்த கதையெல்லாம் ‘தண்ணிக் கேன் போட வந்தேன் ப்ரோ’ மாதிரிதான். நான் குருவி படத்தோட படபிடிப்பைதான் பார்க்கப்போனேன். அந்த சீனுக்கு சில ஆர்டிஸ்ட்களை தேர்ந்தெடுத்து வச்சிருந்தாங்க. ஆனா, கடைசி நேரத்துல அவங்க செட் ஆகல. உடனடியாக என்னுடைய அப்பாகிட்ட கேட்டு என்னை நடிக்க வைக்க திட்டமிட்டாங்க.
அப்புறம் என்னை நடிக்க வச்சு டெஸ்ட் செய்தாங்க. நல்ல பண்ணினேனு என்னை படத்துல நடிக்கிறதுக்கு தேர்ந்தெடுத்தாங்க. பிறகு, த்ரிஷா மேம்லாம் வந்தாங்க எனக்கான டைலாக் சொன்னாங்க. நான் பேசி அந்த காட்சியெல்லாம் நடிச்சு முடிச்சிட்டேன். நான் ‘குருவி’ படத்துல நடிக்காத வரைக்கும் பைலட் ஆகணும்ங்கிறதுதான் என்னுடைய கனவு. ஆனா, விஜய் அண்ணா அப்போ என்கிட்ட ‘ டைரக்டர் நீங்க நல்லா பண்ணினதாக சொன்னாங்க. பெரிய நடிகராக வர்றதுக்கு வாழ்த்துகள்’னு ஊக்கம் கொடுத்தாரு. அவர் அந்த வார்த்தையை சொன்னதும் அதை வேதவாக்காக எடுத்துகிட்டு நடிகராகணும்னு லட்சத்தியத்தோட ஓட ஆரம்பிச்சுட்டேன்.
மலாய்ல நான் ஹீரோ, வில்லன்னு எல்லா கதாபாத்திரங்களும் பண்ணீட்டு இருக்கேன். அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும்னு காத்துட்டு இருக்கேன். அதுக்கு முன்னாடி விஜய் அண்ணன்கூட நடிச்சிடணும்னு ஆசை இருந்துச்சு. அவரும் அரசியலுக்குப் போறாரு. அவரோட கடைசி படங்கள் இதெல்லாம். இப்போ ‘கோட்’ படத்துல நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்ச கதையெல்லாம் ரொம்பவே கஷ்டமான ஒன்று.
எதாவதொரு டெக்னீசியன் மூலமாக இயக்குநர் வெங்கட் பிரபுவை சந்திச்சிடலாம்னு ஆசைப்பட்டேன். அப்புறம் சில முயற்சிகளுக்குப் பிறகு உதவி இயக்குநரை சந்திச்சேன். பிறகு, வெங்கட் பிரபு சாரையும் மீட் பண்ணி பேசினேன். ஷூட்டிங் தொடங்கி கடைசி கட்டத்துல என்கிட்ட ‘ரஷ்யா வர முடியுமா’னு கேட்டாங்க. உடனடியாக நான் கிளம்பி போனேன். படத்துல என்னுடைய காட்சி ஐந்து நிமிஷம்தான் வரும். ஆனா, விஜய் அண்ணனோட ஐந்து நாட்கள் இருந்தேன். அந்த நாட்கள் எனக்கு எப்போதும் ஸ்பெஷலானது. அதுக்கப்புறம் நேரம் கிடைக்கும்போது அவர்கிட்ட பேசினேன்.
அந்த ஐந்து நாட்கள் நான் விஜய் அண்ணனை ஒரு மனிதராக புரிஞ்சுகிட்டேன். எல்லோரும் சொல்ற மாதிரி அவர் ரொம்ப எளிமையானவர். மக்கள் கொடுக்கிற இப்படியான அன்புக்கு அவர் தகுதியானவர். ஒரு நாள் அங்க ஷூட்ல செட் தயாராகல. அந்த நேரத்துல என்னை மதிச்சு கேரவான்குள்ள கூப்பிட்டு ஒரு மணி நேரம் பேசினாரு. அவர்கிட்ட ‘நான்தான் குருவி படத்துல நடிச்ச அந்த பையன்’னு சொல்லி அறிமுகப்படுத்தினேன். அவர் ஆச்சரியப்பட்டு சந்தோஷப்பட்டாரு. அவரும் ‘ஹாப்பி ஃபார் யூ’னு சொன்னாரு.” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ்அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…