தேனியில் `வருத்தப்படாத வாலிபர் சங்க’ படப்புகழ் இயக்குநர் பொன்ராம் இயக்கும் புதிய படம் ஒன்றில் விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் நடிகர் சரத்குமார் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளிவந்த GOAT திரைப்படத்தை விஜயகாந்தின் மகன்கள் சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன், நடிகர் சரத்குமார் மற்றும் இயக்குநர் பொன்ராம் ஆகியோர் தேனியில் உள்ள வெற்றி சினிமாஸ் திரையரங்கில் கண்டு களித்தனர்.
GOAT திரைப்படத்தின் இடைவேளையின் போது செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முகப்பாண்டியன், “GOAT திரைப்படத்தில் கேப்டன் தோன்றிய காட்சியில் கண் இமைக்காமல் பார்த்து ரசித்தோம். அதுவும் எங்கள் கட்சியினர் மற்றும் விஜய் ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் எங்கள் தந்தையை பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
வெங்கட்பிரபு எனது தந்தையின் காட்சியை நன்றாக இயக்கியிருக்கிறார். நடிகர் விஜய், வெங்கட் பிரபு இருவரும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். அதனடிப்படையில் தான் GOAT திரைப்படத்தை விஜயகாந்த்-திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எடுத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
செந்தூரப்பாண்டி திரைப்படத்தில் இருந்து விஜய் உடனான விஜயகாந்தின் பாசமும் பந்தமும் தொடர்கிறது. அதேபோல் விஜயகாந்த்-தை வைத்து 41 படங்கள் இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகரன் உடனான பயணமும் தொடர்கிறது. எனவே GOAT திரைப்படத்தை, ஒரு குடும்ப படமாகத் தான் பார்க்கிறோம்” என்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்பில் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: