வானத்திலிருந்து விழுகின்ற எரிகல், சியோதி என்கிற பொக்கிஷ விளக்காக மாறுகிறது. விலைமதிப்பற்ற அந்தப் பொருள் ஒரே பரம்பரையைச் சேர்ந்த மூன்று நபர்களின் வாழ்வில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவருகிறது என்பதே ARM (அஜயண்டே ரண்டாம் மோஷனம்).
கேரளாவின் ஹரிபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் அஜயன் (டோவினோ தாமஸ்), அதே ஊரிலுள்ள செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்த லக்ஷ்மியை (கீர்த்தி ஷெட்டி) காதலிக்கிறார். களரி, மாணவர்களுக்குப் பாடம் எடுப்பது என அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பும் அவரை சில களங்கங்களும் பின்தொடர்கின்றன. ஒரு காலத்தில் கிராமத்தின் கோயிலிலிருந்த விலையுயர்ந்த சியோதி விளக்கைத் திருடிச் சென்றது அவரது தாத்தா மணியன் (டோவினோ தாமஸ்) என்பதாலும், அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அஜயனைத் திருடனாகவே பார்க்கிறது அந்த கிராமம்.
இந்த நிலையில் ஊரில் சில திருட்டு சம்பவங்கள் நடைபெற அனைவரின் சந்தேகப் பார்வையும் அஜயன் மீதே விழுகிறது. ஊரிலிருக்கும் கோயிலைப் படமெடுக்க வந்திருக்கும் சுதேவ் (ஹரீஷ் உத்தமன்) இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். இதன் பிறகு என்ன நடக்கிறது, யார் இந்த சுதேவ், ஸ்ரீபூதி விளக்குக்கும் அஜயனின் குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற மூன்று தலைமுறைகளின் கதையைச் சாகச பாணியில் சொல்லியிருக்கிறது படம்.
குஞ்சி கெழு, மணியன், அஜயன் என மூன்று தலைமுறை பாத்திரங்களை ஏற்றிருக்கும் டொவினோ தாமஸ், சியோதி விளக்கின் வெளிச்சம் போல மும்முனையிலும் பிரகாசித்திருக்கிறார். அஜயனும் மணியனும் காட்சிக்குக் காட்சி மாறி வந்தாலும் அவர்கள் இருவருக்கும் இருக்கும் மலையளவு வித்தியாசங்களை தன் உடல்மொழியில் சிறப்பாகக் கடத்தியிருக்கிறார். இது டொவினோவுக்கு ஐம்பதாவது படமும்கூட! அதற்கான நூறு சதவிகித உழைப்பைக் கொடுத்துச் சதமடித்திருக்கிறார்.
மூன்று டொவினோ, மூன்று நாயகிகள் என ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லக்ஷ்மி, கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்கள். அதில் ஐஸ்வர்யா ராஜேஷுக்குப் பெரிதாக வேலையில்லை. சுரபி லக்ஷ்மிக்குக் குறைவான திரை நேரம் என்றாலும் மனதில் நிற்கும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
அடுத்து டெம்ப்ளேட் காதல் காட்சிக்கு மட்டும் வந்து போகிறார் கீர்த்தி ஷெட்டி. ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டும் பேசில் ஜோசப்பை இன்னும் அதிகம் பயன்படுத்தியிருக்கலாம். கீர்த்தி ஷெட்டியின் தந்தையாக வரும் நிஸ்தர் சைத், பிளாக் மெயில் செய்யும் ஹரீஷ் உத்தமன் ஆகியோர் கதாபாத்திரத்துக்குத் தேவையானதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். பொற்கொல்லனாக வரும் நடிகர் ஜெகதீஷ் கதாபாத்திரத்தை மேம்போக்காக அணுகி வீணடித்திருக்கிறார் இயக்குநர்.
மூன்று காலக்கோடு, திரை நெடுக கலையலங்காரம், தேவைக்கேற்ப வரைகலை எனச் சவாலான காட்சியமைப்புக்குச் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துக் காப்பாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜோமன் டி.ஜான். இரவு நேரக்காட்சிகளையும், அருவியைச் சுற்றியுள்ள ரம்மியமான இயற்கைக்காட்சிகளையும் அற்புதமான கோணங்களில் செதுக்கியிருக்கிறார்.
கோகுல் தாஸின் கலை இயக்கம் புதையல் வேட்டைக்கான வழித்தடத்தில் சாகசம் புரிந்திருக்கிறது. ஆனால் இந்த சாகசத்தைச் சற்றே தெளிவாகவும் வேகமாகவும் கோர்க்கத் தவறியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஷமீர் முகம்மது. திபு நினன் தாமஸ் இசையில் ‘பூவே பூவே தாழம்பூவே’ பாடல் இதமான காதல் ராகம் என்றால், பின்னணி இசை ஆக்ரோஷமாக அதிர்ந்திருக்கிறது. இருப்பினும் வலுவான உணர்வுகளைத் தூண்டவேண்டிய பல காட்சிகள் எழுத்தாக கிளிக் ஆகாமல் போனதால் காட்சிக்கும் இசைக்கும் இருக்கும் ஒத்திசைவு வலுவிழந்திருக்கிறது.
தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாக கேரளாவில் வாழும் நாட்டுப்புறக் கதைகளின் கூறுகளைப் பிரதிபலித்திருக்கிறது சுஜித் நம்பியாரின் எழுத்து. அதற்குக் காட்சிக்குக் காட்சி தொழில்நுட்ப ரீதியாக நல்ல மேக்கிங்கைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜித்தின் லால். ஆனால் அது திரைக்கதையாகக் கோர்க்கப்பட்ட விதத்தில் சுவாரஸ்யம் மிஸ்ஸிங்.
பிரபஞ்சமே தியான சொற்பொழிவு நடத்துவது, எரிகல் விழுந்து காடுகள் நகரமாவது, அரசனின் ராஜதந்திரம் எனத் தொடக்கம் பவர்பிளே போலப் பிரகாசமாகத் தொடங்குகிறது. ஆனால் அடுத்து வரும் மணியனின் கதை, பெரிய தாக்கத்தைக் கொடுக்காமல் அப்படியே அடுத்த கதைக்கு நகர்வது டெஸ்ட் மேட்ச் பீலிங்.
“இது மன்னராட்சி அல்ல, ஜனநாயக ஆட்சி” போன்ற வசனங்களிலும், பிறப்பின் அடிப்படையில் ஒருவனது குணாதிசயத்தைப் பார்க்கக்கூடாது என்கிற எண்ணத்திலும் எழுதப்பட்ட காட்சிகளுக்குப் பாராட்டுகள். ஆனால் பல திருப்பங்கள் நிறைந்த கதைகளில் அதற்கான அழுத்தங்கள் திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லாமல் போனது படத்தின் பெரிய மைனஸ். புதையலைத் தேடிப் போகும் சாகச பயணங்களும் பல பழைய படங்களை நினைவுபடுத்துகின்றன. இரண்டாம் பாதியில் மாஸாக 1000 வாலாவாக வெடித்துச் சிதறவேண்டிய பல இடங்களெல்லாம் புஸ்வாணமாக எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் நொடியில் முடிந்து போகின்றன.
மொத்தத்தில் ஒரு வரலாற்றுக் கதைக்கான நல்ல மேக்கிங், சிறப்பான கதைக்களம் அமைந்த போதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திரைக்கதை இல்லாத காரணத்தால் `அஜயனின் இரண்டாம் திருட்டு’ (ARM) நமது மனதை முழுமையாகக் கொள்ளையடிக்கவில்லை.