IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம் எப்போதும், எங்கு நடக்கும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. அதுமட்டுமில்லை, 10 அணிகளும் தற்போதைய தங்கள் வீரர்களில் எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம், ஏலத்தில் எத்தனை கோடிகள் ஒதுக்கப்படும், எத்தனை RTM கார்டுகள் வழங்கப்படும் உள்ளிட்ட விதிகளும் இன்னும் தெரியவரவில்லை.
இந்த விவரங்கள் அனைத்தும் தெரிந்தால் மட்டுமே ஒரு அணி யார் யாரை தக்கவைக்கும், யார் யாரை விடுவிக்க நினைக்கும், யாரை முதலில் விடுவித்து அதன்பின் RTM மூலம் ஏலத்தில் தூக்க நினைக்கும் என்பதை கணிக்க இயலும். செப்டம்பர் மாதத்திலேயே ஏலத்தின் விதிகள், ஏலம் நடைபெறும் இடம், நாள் உள்ளிட்ட விவரங்கள் வெளியாக அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
4 ரிட்டென்ஷன் மற்றும் 2 ஆர்டிஎம்
மேலும், ஒரு அணி நான்கு வீரர்களை அதுவும் எவ்வித வகைப்பாடுகளும் இன்றி தக்கவைக்கலாம் என கூறப்படுகிறது. அதன்படி ஒரு அணி நான்கு இந்திய வீரர்களையோ அல்லது நான்கு வெளிநாட்டு வீரர்களையோ கூட நேரடியாக தக்கவைக்கலாம் என விதி வர இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மெகா ஏலத்தில் 2 RTM கார்டுகளை அணிகளுக்கு ஒதுக்கவும் ஐபிஎல் கமிட்டி முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
வீரர்களுக்கு உரிய தொகை கிடைக்காமல் செய்து இந்த RTM கார்டு முறை அநீதி இழைப்பதாக ரவிசந்திரன் அஸ்வின் உள்பட பலரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். 2022 மெகா ஏலத்தில் RTM கார்டு முறை நீக்கப்பட்ட நிலையில், பல அணிகளின் கோரிக்கையால் மீண்டும் அம்முறை கொண்டுவரப்படலாம் என கூறப்படுகிறது. RTM கார்டு பயன்படுத்துவதிலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கேகேஆர் யார் யாரை தக்கவைக்கும்?
அப்படியிருக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயர், ரின்கு சிங், சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோரை தக்கவைப்பார்கள் எனலாம். பில் சால்ட், வருண் சக்ரவர்த்தியை ஏலத்தில் RTM மூலம் எடுக்கவும் அந்த அணி திட்டமிட்டிருக்கலாம். அந்த வகையில், கேகேஆர் அணியின் சில வீரர்கள் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு வரும்பட்சத்தில் ஆர்சிபி அணி இந்த 3 வீரர்களை நிச்சயம் குறிவைக்கும். அவர்கள் குறித்து இங்கு காணலாம்.
அங்கிரிஷ் ரகுவன்ஷி
19 வயது இளம் வீரரான இவர் கேகேஆர் அணியின் ஷாருக்கானின் பேவரட் வீரர் ஆவார். இருப்பினும், ரகுவன்ஷியை தக்கவைப்பதில் கேகேஆர் அணிக்கு சில சிக்கல்களும் ஏற்படலாம். அந்த வகையில், தங்களது பேட்டிங் லைன்-அப்பில் அதிரடி காட்டும் இந்திய வீரரை சேர்க்க துடிக்கும் ஆர்சிபி நிச்சயம் ரகுவன்ஷியை நிறைய தொகையில் எடுக்கும்.
சுயாஷ் சர்மா
வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் உள்ளிட்ட சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கும் இடத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பதே அரிதுதான். ஆர்சிபி அணி ஒரு நல்ல ஸ்பின்னர் இல்லாமல் திணறிவரும் வேளையில் இவரை எடுக்க முயற்சிக்கும். மிடில் ஆர்டரில் எதிரணிகளை சுழல் வலையில் சிக்கவைப்பதில் சுயாஷ் வல்லவர்
ரமன்தீப் சிங்
அடுத்தாண்டு ஆர்சிபியில் கிரீன் நிச்சயமாக இருக்கமாட்டார். எனவே, ஒரு நல்ல பினிஷருக்கான தேடலில் ஆர்சிபி இறங்கும். அந்த வகையில், வேகபந்துவீச்சு ஆல்ரவுண்டரும், பினிஷருமான ரமன் தீப் சிங்கை ஆர்சிபி எடுக்க துடிக்கும். ரமன் தீப் சிங் ஆர்சிபிக்கு வந்தால் நிச்சயம் மிடில் ஆர்டரில் பலம் சேர்ப்பார்.