கொல்கத்தா: “மக்களின் நலனுக்காக நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய தயாராகவே இருக்கிறேன். ஆனால் என்னுடைய எதிரிகள் என்னுடைய நாற்காலியைத்தான் குறிவைத்திருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”எனக்கு முதல்வர் பதவி வேண்டாம். எங்கள் அரசாங்கம் நிறைய அவமானங்களை பார்த்து விட்டது. நடந்து வரும் போராட்டங்களில் அரசியல் சாயம் கலந்திருக்கிறது. நீதிவேண்டி மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். மக்களின் நலனுக்காக நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய தயாராகவே இருக்கிறேன். ஆனால் என்னுடைய எதிரிகள் என்னுடைய நாற்காலியைத்தான் குறிவைத்திருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்
மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் 2 மணி நேரங்களுக்கு மேலாக காத்திருக்கிறோம். நாங்கள் திறந்த மனதுடன் அவர்களுடன் கலந்துரையாட விரும்புகிறோம். இந்த போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து இதுவரை 27 நோயாளிகள் இறந்துள்ளனர். பெரும்பாலான மருத்துவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் ஒருசிலர் மட்டுமே அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது” இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து, கடந்த 33 நாட்களாக அந்த மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாநில தலைமைச் செயலர் மனோஜ் பந்த், போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு நேற்று காலையில் மின்னஞ்சல் மூலம் அழைப்பு விடுத்தார்.
மாலை 6 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு 12 முதல் 15 மருத்துவர்கள் குழுவை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், மருத்துவர்கள் அளித்த பதிலில், “குறைந்தபட்சம் 30 பிரதிநிதிகள் அடங்கிய குழுவை சந்திக்க அனுமதிக்க வேண்டும். முதல்வர் மம்தா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, இந்த நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். பெண் மருத்துவர் கொலையில் தொடர்புடைய மற்றும் ஆதாரங்களை அழித்த அனைவரையும் தண்டிக்க வேண்டும்” என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 2வது நாளாக முதல்வர் மம்தா பானர்ஜி தலைமைச் செயலகத்தில் காத்திருந்தார். ஆனால் தலைமைச் செயலகம் வரை வந்த மருத்துவர்கள் குழு, முதல்வரை சந்திக்காமலேயே திரும்பிவிட்டது.