விருதுநகர்: திமுக கூட்டத்தில் வழங்கிய பிரியாணியை சாப்பிட்ட 65 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மதுரை மாவட்டம் வில்லூரில் திமுக தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர் கூட்டம் நேற்று (செப். 20 ) காலை நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மதன்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது அதோடு டப்பாவில் அடைக்கப்பட்ட சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
பிரியாணியை சாப்பிட்ட கள்ளிக்குடி, லாலாபுரம், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட 65 பேருக்கு இரவு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் விருதுநகர், திருமங்கலம், கள்ளிக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் 6 சிறுவர்கள் உட்பட 20 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு கருதி அரசு மருத்துவமனையில் குவிக்கப்பட்டனர். நேற்று வழங்கிய உணவை முந்தைய நாள் இரவே தயாரித்து டப்பாவில் அடைத்து வைத்ததால் பிரியாணி கெட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.