பரான்கியா,
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2026-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடுகளை தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகும்.
தற்போது தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடக்கின்றன. இதில் தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் 10 அணிகள் இடம் பெற்றுள்ளன. லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெறும்.
இதில் பரான்கியாவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் கொலம்பியா, ‘நம்பர் ஒன்’ அணியும், உலக சாம்பியனுமான அர்ஜென்டினாவை சந்தித்தது. உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்துடன் களம் புகுந்த கொலம்பியா 25-வது நிமிடத்தில் கோல் அடித்தது. அந்த அணியின் யர்சென் மோஸ்கியரா கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் நிகோ கோன்சலேஸ் பதில் கோல் அடித்தார்.
ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கொலம்பியா கேப்டன் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் கோலாக்கினார். இதனால் கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.அர்ஜென்டினா அணியில் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி காயம் காரணமாக ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரிவில் ஒவ்வொரு அணியும் இதுவரை தலா 8 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. அர்ஜென்டினா 18 புள்ளிகளுடன் (6 வெற்றி, 2 தோல்வி) முதலிடத்தில் நீடிக்கிறது. கொலம்பியா 2-வது இடத்திலும், உருகுவே 3-வது இடத்திலும் உள்ளன