புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று காலமானார். அவருக்கு வயது 72.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதால், கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செயற்கை சுவாசம் உதவியுடன் அவருக்கு தீவிர கிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி நேற்று பிற்பகல் 3.05 மணிக்கு காலமானார். சீதாராம் யெச்சூரி கடந்த 1952 ஆகஸ்ட் 12-ம் தேதி அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் (தற்போது சென்னை) பிறந்தவர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) மாணவராக இருந்து, இந்திய மாணவர் கூட்டமைப்பில் (எஸ்எஃப்ஐ) உறுப்பினராக சேர்ந்தார். 1984-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார். 1992-ல்அக்கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான பொலிட்பீரோவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
2005 முதல் 2017 வரை 12 ஆண்டுகள் மாநிலங்களவை எம்.பி.யாக பணியாற்றியவர். 2015-ல் நடந்த கட்சியின் 21-வது மாநாட்டில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இண்டியா கூட்டணியில் முக்கிய பங்கு வகித்தார். பொருளாதார நிபுணர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர் யெச்சூரி. சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: மாணவர் தலைவர், தேசிய தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் என தனித்துவமான செல்வாக்குமிக்க பொறுப்புகளில் இருந்தவர் சீதாராம் யெச்சூரி. தனது உறுதியான சித்தாந்தங்களால் கட்சிக்கும் அப்பாற்பட்ட நண்பர்களை பெற்றிருந்தார்.
பிரதமர் மோடி: மிகவும் திறமையான நாடாளுமன்ற உறுப்பினராக முத்திரை பதித்தவர் சீதாராம் யெச்சூரி. இடதுசாரிகளில் முக்கிய தலைவராக விளங்கியவர்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி: இந்தியாவின் சித்தாந்தங்களை பாதுகாப்பதில் அக்கறையுடன் செயல்பட்டார் யெச்சூரி. அவரது நீண்டகால நட்பை இழந்து தனிமரமாகி உள்ளேன்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள் யெச்சூரியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துவார்கள் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் மருத்துவ ஆராய்ச்சி நோக்கங்களுக் காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர். வீர வணக்கம்செலுத்திய பிறகு யெச்சூரியின் உடல் எய்ம்ஸ்மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது.