புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டு விநாயகர் பூஜையில், பிரதமர் மோடி பங்கேற்றதை விமர்சிப்பவர்களுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் நேற்று முன்தினம் பூஜை நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ஆரத்தி எடுத்து வழிபட்டார். இந்த வீடியோ வெளியாகி உள்ளது. எதிர்க்கட்சிதலைவர்களும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களும் இச்சம்பவத்தை விமர்சித்துள்ளனர்.
இதுகுறித்து சிவசேனா (உத்தவ் அணி) எம்.பி சஞ்சய் ராவத் கூறியதாவது: தலைமை நீதிபதி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். அரசியல்சாசன பாதுகாவலர்கள், அரசியல் தலைவர்களை சந்தித்தால், மக்களுக்கு சந்தேகம் வரும். மகாராஷ்டிராவின் தற்போதைய அரசு குறித்த எங்களின் வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன்பு விசாரணைக்கு வர இருக்கிறது. பிரதமர் மோடியும் அதில் ஒரு பகுதியாக இருக்கிறார். இப்போது எங்களுக்கு நீதிகிடைக்குமா என்ற கவலை ஏற்பட்டுள்ளது. அந்த வழக்கில்இருந்து விலகுவது பற்றிதலைமை நீதிபதி பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் எக்ஸ்தளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், ‘‘அரசு நிர்வாகம் மற்றும் நீதித்துறை இடையிலான அதிகார பிரிப்பில் தலைமை நீதிபதி சமரசம் செய்து கொண்டுள்ளார். தலைமை நீதிபதியின் சுதந்திரத்தில் இருந்த நம்பிக்கை தகர்ந்துவிட்டது. அரசு நிர்வாகத்திடம் இருந்து தலைமை நீதிபதி பின்பற்ற வேண்டிய சுதந்திரத்தை வெளிப்படையாக சமரசம் செய்து கொண்டதற்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்
எதிர்க்கட்சி தலைவர்களின் விமர்சனங்களுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக பொதுச் செயலாளர் சந்தோஷ் கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றது பலரது தூக்கத்தை கெடுத்துள்ளது. இடதுசாரிகள் கூக்குரலிடத் தொடங்கியுள்ளனர். இது பொழுதுபோக்கு நிகழ்ச்சி அல்ல, பக்தி நிகழ்ச்சி’’ என தெரிவித்துள்ளார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பத் பித்ரா நேற்று அளித்த பேட்டியில், ‘‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நடத்திய இஃப்தார் விருந்தில், அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கலந்து கொண்டார். அப்போது எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் தற்போது கணபதி பூஜையில் பிரதமர் பங்கேற்றதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பிரதமர், தலைமை நீதிபதியை சந்தித்தால் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சியினர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்க எம்.பி. இல்ஹான்உமரை ராகுல் காந்தி சந்திந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை’’ என்றார்.
சிவசேனா எம்.பி மிலிந்த் தியோரா கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டு கணபதி பூஜையில் பிரதமர் பங்கேற்ற குறித்து பொறுப்பற்ற கருத்துகளை தெரிவிப்பது துரதிர்ஷ்டம். தீர்ப்புதங்களுக்கு சாதகமாக வந்தால், உச்ச நீதிமன்றத்தின் நம்பகத்தன்மையை எதிர்க்கட்சியினர் பாராட்டுவர். எதிராக வந்தால், நீதித்துறை சமரசம் செய்து கொள்வதாக விமர்சிப்பர்.
உச்ச நீதிமன்றத்தின் மீது ஆதாரமற்ற அவதூறுகளை தெரிவிப்பது அபாயகரமான முன்மாதிரி. இந்திய அரசியல் மிக மோசமான பாதையில் செல்கிறது. தன்னிச்சையாக நீதிபதிகளை நியமித்த காலம் எல்லாம் கடந்துவிட்டது. தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மிகுந்த நேர்மையுடன் பணியாற்றி வருகிறார். அவரது நம்பகத் தன்மையை களங்கப்படுத்த நினைப்பவர்கள், நாட்டு நலனுக்கு எதிராக செயல்படுவதை காட்டுகிறது’’ என்றார்.