சென்னை: சென்னை மாநகர் முழுவதும் நேற்று (செப்.12) இரவு பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கோட்டூர்புரம் மயிலாப்பூர், தேனாம்பேட்டை, நந்தனம், அடையாறு, மந்தைவெளி, சூளைமேடு, மாதவரம் மற்றும் வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் தூக்கமின்றி பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மின் தடைக்கான காரணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கியுள்ளது.
மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சென்னை முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள விளக்கத்தில், “நேற்றிரவு மணலியில் உள்ள துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டது. ஆனால், தீ விபத்தில் இரண்டு ஃபீடர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் சென்னைக்கு மின் விநியோகம் தடைபட்டது.
இருப்பினும் மின்சார வாரியம் துரிதமாக செயல்பட்டு மாற்றுப் பாதைகளில் மின் விநியோகம் செய்து படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் மீண்டும் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்தது. வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற மின்சாரத்தை வழங்கி ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த அமைப்பாக தன்னை நிலைநாட்டியுள்ளது. மின் தடை காரணமாக சென்னையில் அத்தியாவசியத் தேவைகள் ஏதும் பாதிக்கப்படவில்லை. தற்போது மின் சேவை 100 சதவீதம் சீர் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிகப்பட்டுள்ளது.