15 வருடங்களுக்குப் பிறகு ‘சுந்தர்.சி – வடிவேலு’ கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது!
சுந்தர்.சி படங்களின் முக்கியமான புள்ளியே காமெடிதான். இவருடைய அனைத்து படங்களிலும் காமெடியன்களுக்கென ஒரு வலுவான டிராக் இருக்கும். கவுண்டமணி, விவேக், வடிவேலு போன்ற நகைச்சுவை நடிகர்களுக்கு நல்ல காமெடி கதாபாத்திரங்களை அமைத்துக் கொடுத்திருக்கிறார் சுந்தர் சி.
அதிலும் முக்கியமாகச் சுந்தர்.சி – வடிவேலு கூட்டணி என்றால் காமெடி திருவிழாதான். வடிவேலுவுக்கு அத்தனை ரகளையான கதாபாத்திரங்களைச் சுந்தர்.சி அமைத்துக் கொடுத்திருக்கிறார். சுந்தர்.சி வடிவேலுவை வைத்து இயக்கினாலும் சரி, அவருடன் நடித்தாலும் சரி அது எப்போதும் ஸ்பெஷல்தான்.
வின்னர்:
‘வின்னர்’ திரைப்படம்தான் ‘சுந்தர் சி – வடிவேலு’ கூட்டணியில் உருவான முதல் திரைப்படம். இந்த படத்தை வடிவேலுவை காமெடி டிராக்கிற்கு நடிக்க வைக்கத் திட்டமிட்டிருக்கிறார் சுந்தர்.சி. அந்த நேரத்தில் வடிவேலுவுக்குக் காலில் அடிப்பட்டிருந்திருக்கிறது. தனது முயற்சியால் வடிவேலுவைப் படத்திற்குள் கொண்டு வந்தார் சுந்தர்.சி. படத்தின் முதற் காட்சியிலேயே வடிவேலுவின் கைப்புள்ள கதாபாத்திரத்திற்குக் காலில் அடிபடும்படி காட்சிப்படுத்திவிட்டு அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தைப் படம் முழுவதும் காலில் அடிபட்டதுபோலவே நடக்கவிட்டார். இந்த யுக்தியும் சரியாக க்ளிக் ஆகி கைப்புள்ள கதாபாத்திரம் பெரிதளவில் மக்களிடையே பரிச்சயமானது.
கிரி:
இந்த காம்போவில் உருவான இரண்டாவது திரைப்படம்தான் ‘கிரி’. எப்படி கைப்புள்ள கதாபாத்திரத்திற்கு அவர் மீசையும் நடையும் ஒரு அடையாளமாக அமைந்ததோ அதே போல இந்த வீரபாகு கதாபாத்திரத்திற்கு உடையும் ஹேர் ஸ்டைலும்!
லண்டன்:
‘வின்னர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அதே கூட்டணி மீண்டும் ‘லண்டன்’ படத்தில் இணைந்தது. சுந்தர்.சி கமர்சியல் மீட்டருக்கு சேர்க்க வேண்டிய அத்தனை விஷயங்களிலும் மாஸ்டர் என ஒரு நேர்மறையான விமர்சனத்தை முன் வைப்பார்கள். உண்மையாகவே, அதே போன்றதொரு யுக்தியை இத்திரைப்படத்தில் கையாண்டிருப்பார். தொய்வு ஏற்படும் நேரத்திலெல்லாம் வடிவேலு – பாண்டியராஜ் கூட்டணியை காமெடியில் களமிறக்கி அட்டகாசம் செய்திருப்பார் சுந்தர்.சி.
ரெண்டு:
சுந்தர்.சி – வடிவேலு கூட்டணியில் வந்த படங்களில் இந்த ‘ரெண்டு’ திரைப்படத்தின் ‘கிரிகாலன்’ கதாபாத்திரம் கூடுதல் ஸ்பெஷல் என்றே சொல்லலாம். ‘வெல்கம் டு கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ’, ‘அந்த ஆட்டோகாரத் தம்பி எங்கே’ போன்ற வடிவேலுவின் நகைச்சுவை வசனங்கள்தான் இத்திரைப்படத்தின் முக்கியமான ஹைலைட்! குறிப்பாக மீம்ஸ்களிலும் அதிகமாக இந்த படத்தின் டெம்ப்ளேட்களைதான் பார்க்க முடிகிறது.
தலைநகரம்:
‘ரெண்டு’ திரைப்படம் வெளியான அதே 2006-ம் ஆண்டு முதல் முறையாக சுந்தர்.சியும் வடிவேலுவும் இணைந்து நடித்தார்கள். பிங்க் கோட், போனி டைல் என வழக்கமாக காமெடியனுக்கு இல்லாத டிசைனை வடிவேலுவுக்கு இந்த படத்தில் அமைத்தார் இயக்குநர் சுராஜ். வடிவேலு நடித்த கதாபாத்திரங்களில் அதிகமாகப் பேசப்படும் கதாபாத்திரங்களில் இந்த ‘நாய் சேகர்’ கதாபாத்திரமும் ஒன்று. இந்த கதாபாத்திரம் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து நீண்டு இடைவெளிக்குப் பிறகு ‘நாய் சேகர்’ என்ற படத்திலேயே வடிவேலு நடித்தார்.
நகரம் மறுபக்கம்:
‘ரெண்டு’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் நடித்தார் வடிவேலு. இத்திரைப்படத்தைச் சுந்தர்.சி இயக்கியதோடு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்தார். அதுமட்டுமல்ல, வடிவேலுவின் ஸ்டைல் பாண்டி கதாபாத்திரங்களுடன் பல ரகளைகளையும் செய்வார். நாம் காமிக்குகளில் பார்த்துப் பழகிய கதாபாத்திரங்களின் லுக்கைபோலவே இத்திரைப்படத்தில் வடிவேலுவுக்குச் சுந்தர்.சி அமைத்திருப்பார்.
சுந்தர்.சி இயக்கிய படங்களில் வடிவேலு ஒவ்வொரு படத்திற்குப் பல விஷயங்களில் வேறுபாடு காட்டியிருக்கிறார். இந்த கூட்டணியில் உருவான அத்தனை கதாபாத்திரங்களையும் மக்கள் இன்றும் ரசித்து வருகிறார்கள். தொலைக்காட்சியிலோ, அலைபேசியிலோ கைப்புள்ள, கிரிகாலன், வீரபாகு போன்ற கதாபாத்திரங்களைப் பார்த்ததும் அதை மாற்ற மனமில்லாமல் அதை தொடர்ந்து பார்த்துச் சிரிக்கிறார்கள். இப்படியான வரவேற்பைப் பெற்ற இந்த கூட்டணி 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கிறது. சுந்தர்.சி இயக்கி நடித்து வரும் ‘கேங்கர்ஸ்’ படத்தில் வடிவேலுவும் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டிருக்கிறார்கள்.