Maharastra: வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இலவச பாத்திரங்கள்; சிவசேனா-பாஜக கூட்டணியரசு முடிவு

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் பெண் வாக்காளர்களைக் கவர, ஆளும் சிவசேனா – பா.ஜ.க கூட்டணியானது புதுப்புது திட்டங்களை அறிவித்து வருகிறது. ஏற்கனவே பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் கொடுக்கும் திட்டத்தைத் தொடங்கிவிட்டது. ரக்‌ஷாபந்தனையொட்டி இரண்டு மாத தவணையாக ஒவ்வொரு பெண்ணின் வங்கிக்கணக்கிலும் 3,000 ரூபாயை மாநில அரசு செலுத்தியது. அதோடு பட்டம் படித்தவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தையும் அறிவித்திருக்கிறது.

அடுத்த கட்டமாக வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பாத்திரங்கள் கொடுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஏக்நாத் ஷிண்டே

வீட்டுப் பணிகளைச் செய்யும் தொழிலாளர்களுக்கான நல வாரியம் ஒன்று அம்மாநிலத்தில் செயல்படுகிறது. அந்த வாரியத்தில் 50 ஆயிரம் பெண்கள் தங்களது பெயரைப் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு இந்த பாத்திரங்கள் கொடுக்கப்பட இருக்கிறது. நாசிக் மண்டலத்தில் அதிகபட்சமாக 15,000 வீட்டு வேலைக்காரர்கள் தங்களது பெயரை அவ்வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். மாவட்டம் வாரியாக முகாம்கள் அமைத்து இந்த பாத்திரங்கள் பெண்களுக்குக் கொடுக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புனே மற்றும் மும்பையில் விரைவில் இந்தப் பாத்திரங்கள் கொடுக்கப்பட இருக்கிறது என்று தெரிவித்தனர். ஜூலை மாதம் வரை வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தில் 37 ஆயிரம் பேர் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 18 ஆயிரம் பேரைப் புதிதாகச் சேர்த்துள்ளனர். அதோடு முதலில் இந்த வாரியத்தில் சேர பதிவு கட்டணம் ரூ.100 ஆக இருந்தது. அதனை 12 ரூபாயாகக் குறைத்து, அதன் மூலமாக உறுப்பினர்களை ஆளும் கட்சியினர் சேர்த்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

ஏக்நாத் ஷிண்டே

இது குறித்து வீட்டுப் பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த உதய் பட் கூறுகையில்,”வீட்டு வேலை செய்பவர்கள் அனைவரும் பெண்கள் ஆவர். அவர்களுக்கு வீடுகளில் ஏற்கனவே பாத்திரங்கள் இருக்கிறது. அரசு கொடுக்கும் பாத்திரங்கள் எந்த அளவுக்குத் தரமானது என்று தெரியவில்லை. அதோடு வீட்டில் ஒவ்வொரு பாத்திரமும் இரண்டாக மாற வாய்ப்பு இருக்கிறது. எனவே அரசு பாத்திரங்கள் கொடுப்பதற்குப் பதில் அதற்கான பணத்தை வங்கிக் கணக்கில் போட்டால் பெண்கள் தங்களது வீட்டில் இல்லாத பாத்திரங்களை வாங்க வசதியாக இருக்கும்.” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

ஆறு மாதங்களுக்கு முன்பு வாரியத்தில் பதிவு செய்து 55 வயதைக் கடந்த பெண்களுக்கு ஒரே தவணையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.