கேப்டன் பதவியில் இருந்து கலந்தாலோசிக்காமல் நீக்கியதால் மும்பை இந்தியன்ஸ் அணி மீது அதிருப்தியில் இருக்கும் ரோகித் சர்மா ஐபிஎல் 2025 மெகா ஏலத்துக்கு முன்பு தன்னை அணியில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், அவரை அணியில் இருந்து விடுவிப்பது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இதுவரை உறுதியாக முடிவெடுக்கவில்லை. பேச்சுவார்த்தை மூலம் அவரை தொடர்ந்து அணியிலேயே தக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இருப்பினும் ரோகித் சர்மா தரப்பில், மும்பை அணியில் இருக்க விரும்பவில்லை என தெளிவாக தெரிவிக்கப்பட்டுவிட்டதால், வேறு வழியில்லாம் மும்பை அணியில் இருந்து விடுவிக்க அந்த அணி நிர்வாகம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டிருக்கிறது.
அதன்படி, ரோகித் சர்மாவை ஏலத்துக்கு அனுப்பாமல் அதற்கு முன்பாகவே ஐபிஎல் டிரேடிங் மூலம் மற்ற அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி டீல் ஓகே செய்ய முடிவெடுத்துள்ளது. அதாவது, குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து எப்படி ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி வந்ததோ, அதே பார்மேட்டை ரோகித் சர்மாவை விடுப்பதிலும் பின்பற்ற அந்த அணி நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. அதன்படி ரோகித் சர்மாவின் பிராண்ட் வேல்யூ ஆகியவற்றை எல்லாம் கணக்கில் வைத்து மிகப்பெரிய தொகைக்கு அவரை டிரேடிங் செய்ய மும்பை இந்தியன்ஸ அணி முயன்று வருகிறது.
இதனை தெரிந்து கொண்ட மற்ற ஐபிஎல் அணிகளும் ரோகித் சர்மாவை வாங்க விரும்பினாலும் அவருடைய வயதின் அடிப்படையில் மிகப்பெரிய தொகையை செலவு செய்ய வேண்டுமா? என்ற யோசனையிலும் இருக்கின்றன. இப்போதைய நிலவரப்படி, அதிகபட்சமாக 50 கோடி ரூபாய் வரை ரோகித் சர்மாவை வர்த்தகம் செய்ய மும்பை அணி முடிவு செய்துள்ளதாம். ஆனால், ஐபிஎல் வர்த்தக பணப்பரிமாற்ற விதிப்படி ஒரு பிளேயருக்கு அவ்வளவு தொகை கொடுத்து வாங்குவது ஒட்டுமொத்த அணியின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால், மற்ற வழிகளில் இருக்கும் சாத்தியக்கூறுகளை எல்லாம் ரோகித் சர்மாவை வாங்க விரும்பும் அணிகள் சிந்தித்து வருகின்றன.
ஐபிஎல் விதிப்படி அதிகாரப்பூர்வமாக அதிகபட்சமாக 30 கோடி ரூபாய் வரை ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி வர்த்தகம் செய்ய முடியும். அவரை இந்த விலைக்கு வாங்க மற்ற அணிகளும் விருப்பம் தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், கணக்கில் வராத திரைமறைவு தொகை இன்னும் கூடுதலாக இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. எப்படி இருந்தாலும் ஐபிஎல் 2025 ஏலத்துக்கு முன்பாக ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வேறொரு அணிக்கு வர்த்தகமாக அதிக வாய்ப்புகளே இருக்கின்றன. ஆர்சிபி, பஞ்சாப், டெல்லி, குஜராத், லக்னோ ஆகிய அணிகள் ரோகித் சர்மாவை வாங்க ஆர்வம் காட்டுவதால், இதில் ஏதேனும் ஒரு ஜெர்சியில் ரோகித் சர்மாவை வரும் ஐபிஎல் தொடரில் பார்க்கலாம்.