கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு விவகாரத்தில் தலையிடக் கோரி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் முன்னணி என்ற சங்கத்தின் சார்பில் எழுதப்பட்டுள்ள நான்கு பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில், “ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் மிகவும் இழிவான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி வழங்கப்பட வேண்டும். அப்போதுதான், மேற்கு வங்க சுகாதாரத் துறையின் கீழ் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களாகிய நாங்கள், அச்சமின்றி பொதுமக்களுக்கு எங்களது கடமைகளை ஆற்ற முடியும். இந்த கடினமான காலத்தில், உங்கள் தலையீடு எங்கள் அனைவருக்கும் கலங்கரை விளக்கமாக செயல்படும். எங்களைச் சுற்றியுள்ள இருளில் இருந்து வெளியேறுவதற்கான வழியைக் காட்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்தக் கடிதம், இந்த மாதத்தின் தொடக்கத்தில் தயாரிக்கப்பட்டதாகவும் நேற்று (வியாழக்கிழமை) அனுப்பப்பட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களில் ஒருவரான அனிகேத் மஹதோ தெரிவித்துள்ளார். மேலும், குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா ஆகியோருக்கும் இந்தக் கடிதத்தின் நகல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, போராட்டம் நடத்தி வரும் பயிற்சி மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்த நிலையில், நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்படாததால் பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர். இதனால், முதல்வர் மம்தா பானர்ஜி 2 மணி நேரம் காத்திருந்தார். மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் விவரம்: முதல்வர் பதவியில் இருந்து விலக தயார்: மருத்துவர்களுக்காக 2 மணி நேரம் காத்திருந்த பிறகு மம்தா பானர்ஜி அறிவிப்பு
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுகலை பயின்று வந்த மருத்துவ மாணவி, கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மருத்துவமனையின் கருத்தரங்கு மண்டபத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அங்கு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாகவும், பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்கவும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.