Shalini: “ஷாலினி மேல எனக்குக் காதல் வந்துடுமோன்னு பயமா இருக்கு!" – அஜித் சொன்ன காதல் சீக்ரெட்ஸ்

தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவைதைகளா ஜொலிச்ச அந்த நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்கிரீன் நாயகிகள் சீரிஸ்.

நடிகை ஷாலினி

“சினிமா, எனக்கு ரொம்ப பிடிச்ச ஃபீல்டு. ஆனா, கணவன்- மனைவி ரெண்டு பேருமே ஆக்டிங் கரியர்ல இருந்தா, ரெண்டு பேருமே நேரங்காலம் இல்லாம ஷூட்டிங்ல இருக்க வேண்டியதா இருக்கும். இதனால, அவங்களுக்குள்ளாற இடைவெளியும் கம்யூனிகேஷனும் குறைஞ்சுடும். அதனாலதான் நான் கல்யாணத்துக்குப் பிறகு நடிக்கல. இது, நானே விரும்பி எடுத்த இந்த முடிவு” – அப்படின்னு பேட்டி ஒண்ணுல ஷாலினி வெளிப்படையா சொல்லியிருந்தாங்க. ஆமாங்க, ஷாலினி எப்பவுமே ரொம்ப பிராக்டிக்கல் பர்சன். சூழ்நிலைக்கு ஏற்ப சரியான முடிவெடுக்கிறதும், அதைக் கடைசிவரை கடைப்பிடிக்கிறதும் ஷாலினியோட குட் குவாலிட்டீஸ்ல முக்கியமானவை.

பேபி ஷாலினி டு ஹீரோயின் ஷாலினி:

நடிகை ஷாலினி, கேரளாவைச் சேந்தவங்க. இவங்க அப்பா பாபு, நடிகராகணும்னு ஆசைப்பட்டார். அது நடக்கலை. பிரபல மலையாள டைரக்டர் ஃபாசில் இயக்கிய ‘என்டே மம்மாட்டுக்குட்டியம்மாக்கு’ படத்துல சைல்டு ஆர்ட்டிஸ்ட்டா நடிக்க ஷாலினிக்கு வாய்ப்பு வந்துச்சு.

நடிகர் அஜித் – நடிகை ஷாலினி

தமிழ்ல வெளியான ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தோட ஒரிஜினல் வெர்ஷன்தான் இந்த மலையாளப் படம். அப்போ, ஷாலினிக்கு மூணு வயசுதான். நெத்தி வரைக்கும் வந்து ஊஞ்சலாடும் முடி, பேசும் கண்கள், வாய் கொள்ளாச் சிரிப்புனு அந்தப் படத்துல சூப்பரா நடிச்சிருப்பாங்க ஷாலினி. அப்புறம் என்ன… ஷாலினி, மலையாள சினிமால மோஸ்ட் வான்டட் சைல்டு ஆர்ட்டிஸ்ட்டா மாறினாங்க.

1980-கள்ல தமிழ் சினிமால வெளியான ‘ஓசை’, ‘பிள்ளை நிலா’, ‘விடுதலை’, ‘சிறைப் பறவை’, ‘சங்கர் குரு’, ‘ராஜா சின்ன ரோஜா’, ‘பந்தம்’ போன்ற பல படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சு பட்டையைக் கிளப்பினாங்க ஷாலினி. ரகுமான் – நதியா நடிப்புல ‘நிலவே மலரே’ படத்துல, ‘மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே’ பாடல், இப்பவும் நம் காதுகள்ல ரீங்காரமா ஒலிச்சுக்கிட்டு இருக்குதில்லையா? அந்தப் பாட்டுல செல்லக்கோபத்துடன் நடிச்ச ஷாலினியோட ஃபர்மார்மென்ஸ், இப்போ பார்த்தாலும் ரொம்ப க்யூட்டா இருக்கும். 1983 – 1991 வரைக்கும் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகள்ல சக்சஸ்ஃபுல் சைல்டு ஆர்ட்டிஸ்ட்டா மின்னிய ஷாலினி, அதுக்கப்புறமா சினிமாவிலேருந்து ஆறு வருஷங்கள் பிரேக் எடுத்திருந்தாங்க.

பேபி ஷாலினி

“சினிமால இருந்து பிரேக் எடுத்த அந்த நேரத்துல நான் ரொம்ப நிறைவா இருந்தேன். படிப்புல கவனம் செலுத்தியதுடன், என் ஃபிரெண்ட்ஸ்கூட ஜாலியா நேரம் செலவிட்டேன். குழந்தை நட்சத்திரமா இருந்தப்போ கிடைக்காத பிரைவசி, அப்போ எனக்குக் கிடைச்சது” – சிறகு முளைச்ச பட்டாம்பூச்சியைப்போல, அந்த டைம்ல மீடியா இன்டர்வியூல ஷாலினி உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்காங்க. அதன்பிறகு, சாதாரண பொண்ணா நார்மலான வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டிருந்த ஷாலினி, திரும்பவும் ரீஎன்ட்ரி கொடுத்தது, அவரே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

ஃபாசில் டைரக்‌ஷன்ல, 1997-ல் வெளியான ‘அனியத்திப்பிராவு’ங்கிற மலையாளப் படம் செம ஹிட்டாச்சு. அந்தப் படத்துலதான் ஹீரோயினா அறிமுகமானாங்க ஷாலினி. அப்போ அவருக்கு 17 வயசுதான். ‘ரீ-என்ட்ரிக்கு என்ன காரணம்?’னு ஷாலினிகிட்ட மீடியாக்கள் கேட்காம விட்டிருப்பாங்களா என்ன? அதுக்கு ஷாலினி சொன்ன பதில், “மறுபடியும் சினிமால நடிக்கணும்னு கொஞ்சம் கூட யோசிக்கல. ஆனா, ஃபாசில் அங்கிள் கேட்டதால என்னால நோ சொல்ல முடியல. இந்த ஒரேயொரு படத்துல மட்டும் நடிச்சுட்டு, சினிமாவை விட்டுப் போயிடணும்னுதான் ரீ-என்ட்ரி கொடுத்தேன்” அப்படின்னு சொன்னார். ஆனா, அவங்க நினைச்ச மாதிரி அந்த முடிவு அமையல.

ஹோம்லி லுக், பாந்தமான நடிப்பு, சென்சிபிளான டிரெஸ்ஸிங்குன்னு அந்த ‘அனியத்திப்பிராவு’ படத்துல நடிச்ச ஷாலினியை, தங்கள் வீட்டுப் பொண்ணாவே மலையாளிகள் கொண்டாட ஆரம்பிச்சாங்க. அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் ஷாலினிக்குக் குவிய ஆரம்பிச்சது. இதனால, தன் முடிவை மாத்திக்கிட்டு, அன்றைய இளம் ஹீரோக்களுடன் ஆறேழு மலையாளப் படங்கள்ல கதாநாயகியா நடிச்சாங்க.

தங்கை ஷாமிலியுடன் ஷாலினி

‘அனியத்திப்பிராவு’ படம் ரிலீஸான அதே வருஷம், அந்தப் படத்தை தமிழ்ல ‘காதலுக்கு மரியாதை’ங்கிற பெயர்ல ரீமேக் செஞ்சார் டைரக்டர் ஃபாசில். இந்தப் படத்தோட வெற்றியைப் பத்தி தமிழ் ரசிகர்களுக்குச் சொல்லவா வேணும்? தளபதி விஜய்க்குத் திருப்புமுனையா அமைஞ்ச இந்தப் படம், ஷாலினிக்கு சிறப்பான ஓபனிங்கைத் தமிழ் இண்டஸ்ட்ரியிலயும் ஏற்படுத்திக் கொடுத்துச்சு. காதலர்களின் உணர்வுப்போராட்டத்தை மிகை இல்லா நடிப்புல விஜய்யும் ஷாலினியும் வெளிப்படுத்த, தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமா தியேட்டருக்குப்போய், அந்தப் படத்தைப் பார்த்து கைத்தட்டி கொண்டாடினாங்க. அந்த நேரத்துல, ஆன் ஸ்கிரீன்ல விஜய்க்கு பெஸ்ட் ஜோடி ஷாலினிதான்னு ரசிகர்கள் சிலாகிச்சாங்க. அதனாலதான் என்னவோ, இந்த ஜோடி ‘கண்ணுக்குள் நிலவு’ படத்துலயும் டூயட் பாடினாங்க.

லவ் சப்ஜெக்ட் படங்கள்ல ஸ்கோர் பண்ணிட்டிருந்த ஷாலினி, நிஜ வாழ்க்கையில காதல் வயப்பட்டாங்க. அதுக்கு அடித்தளமிட்ட படம்தான் ‘அமர்க்களம்’. இந்தப் படத்துல நடிக்கக்கேட்டு ஷாலினியை தயாரிப்பு நிர்வாகம் அணுகினப்போ, “எனக்கு நடிக்கிறதுல இப்போ இஷ்டம் இல்ல. படிக்கப்போறேன்”னு சொல்லிருக்காங்க. இதைக் கேள்விப்பட்ட நடிகர் அஜித், “உங்ககூட வொர்க் பண்ண நான் ஆசைப்படறேன். தயாரிப்பாளர்களும் உங்களை புக் பண்ண விரும்புறாங்க”னு ஷாலினியை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணிருக்கார். ஆனா, ஷாலினி தன் முடிவிலிருந்து மாறவேயில்லை. பெரும் போராட்டத்துக்கு அப்புறமாதான் ஷாலினியைத் தயாரிப்புக்குழுவினர் சம்மதிக்க வெச்சிருக்காங்க. அங்க இருந்துதான் கோலிவுட்டின் சூப்பர் ஜோடியான அஜித் – ஷாலினியின் காதல் ஆரம்பமாச்சு.

தங்களின் காதல் பத்தி ஒருமுறை அஜித் கொடுத்த பளிச் பதில், சென்சேஷன் ஸ்டேட்மென்ட். ” ‘அமர்க்களம்’ படத்தோட முதல்நாள் ஷூட்டிங்ல ஷாலினியைப் பார்த்தவுடனேயே அவங்கமேல எனக்குக் காதல் வந்துடுச்சு”னு அஜித் வெளிப்படையா சொல்லியிருக்கார். அஜித், ஷாலினிகிட்ட கத்தியை வெச்சு மிரட்டுற மாதிரி, படத்துல முதல் சீன் ஒண்ணு இருக்கும். அந்த ஷாட்ல, நிஜமாவே காயம் ஏற்பட்டு, ஷாலியின் கையில ரத்தம் கொட்டியிருக்கு. இதைப் பார்த்து அஜித் பதறியிருக்கார். “ஒண்ணுமில்ல… சின்ன காயம்தான்”னு ரொம்ப கேஷுவலா ஷாலினி அந்தச் சூழலைக் கடந்துப்போயிருக்காங்க.

நடிகை ஷாலினி

“இந்தச் சின்ன வயசுல இவ்வளவு நிதானமா சிச்சுவேஷனை பக்குவமா ஹேண்டில் பண்றாங்களே…”னு ஆச்சர்யப்பட்ட அஜித், ஷாலினி மேல காதல் வயப்பட்டிருக்கார். “நமக்கு அடிபட்டதும் பதறிப்போயிட்டாரே…”னு அஜித் மேல ஷாலினிக்கும் அன்பு உண்டாயிருக்கு. இவங்க காதலுக்கு அப்போ முதல் சாட்சி, அந்தப் படத்தோட டைரக்டர் சரண்தான். இதுபத்தி ஒரு பேட்டியில அவர் சொன்னப்போ, ” ‘அமர்க்களம்’ ஷூட்டிங்ல, ஒருநாள் அஜித் என்கிட்ட வந்து, ‘படத்தை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிச்சுடுங்க. ஏன்னா, ஷாலினியை நான் லவ் பண்ணிடுவேனோன்னு பயமா இருக்கு’னு சொன்னார். கொஞ்சம் தூரத்திலேருந்து அஜித் சொல்றதைக் கேட்ட ஷாலினியோட முகத்துல ஆயிரம் வாட்ஸ் பிரகாசத்தை அப்போ நான் பாத்தேன்” அப்படின்னு சொல்லியிருக்கார்.

அந்தப் படத்துல அஜித், ரோஜாப்பூ பொக்கேவோட ஷாலினிகிட்ட தன் காதலைச் சொல்லுவார். அந்த ரீல் சீனை ரியல் சீனாக மாத்த நினைச்ச அஜித், நிஜமாவே போக்கே கொடுத்து, ஷாலினிகிட்ட தன் காதலைச் சொல்லிருக்கார். அந்தப் படத்துல வரும் ‘உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு’ பாடலை மையமா வெச்சு, லவ் லெட்டரை எழுதி ஷாலினிகிட்ட கொடுத்திருக்கார் அஜித். ஷாலினிகிட்ட இருந்தும் கிரீன் சிக்னல் கிடைக்க, இவங்க காதல் பலமாகியிருக்கு.

‘அமர்க்களம்’ படத்துக்குப் பிறகு, டைரக்டர் மணிரத்னம் இயக்கத்துல நடிகர் மாதவனோட இவங்க சேர்ந்து நடிச்ச படம் ‘அலைபாயுதே’. அந்த 2000-ம் வருஷம், ஷாலினி நடிச்ச ‘சக்தி’ங்கிற கேரக்டர் நேம், தமிழ்நாட்டுல சென்சேஷனா ஒலிச்சது. மாதவனுடன் ரொமான்ஸ் காட்சிகளாகட்டும், கல்யாணத்துக்குப் பிறகான செல்லச் சண்டைகள், ஈகோ க்ளாஷ்கள்னு பலவிதமான உணர்வுகளையும் நேர்த்தியா கையாண்டு, நடிப்பு ராட்சசியா இந்தப் படத்துல ஷாலினி பெர்ஃபார்ம் பண்ணிருப்பாங்க. இந்தப் படம் ரிலீஸாகி, அடுத்த பத்தே நாள்கள்ல அஜித்தும் ஷாலினியும் திருமணம் செஞ்சுக்கிட்டாங்க. பின்னர், பத்து மாதங்களுக்குப் பிறகுதான், நடிகர் பிரசாந்துடன் ஷாலினி சேர்ந்து நடிச்ச ‘பிரியாத வரம் வேண்டும்’ படம் ரிலீஸ் ஆச்சு. ஷாலினி நடிச்ச கடைசிப் படமான இதுவும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டுதான்.

அலைபாயுதே படத்தில்

தமிழ் மற்றும் மலையாளத்துல லவ் சப்ஜெக்ட் படங்கள்ல ஹீரோயினா நடிச்சாலும், கிசுகிசு, சர்ச்சைன்னு எதுலயுமே ஷாலினியின் பெயர் அடிபடலை. தன் பர்சனல் மற்றும் புரொஃபஷனல்னு ரெண்டு ஏரியாவையும் கவனமாவும் கண்ணியமாவும் பக்குவத்துடனும் ஷாலினி பேலன்ஸ் பண்ணாங்க. தன் யதார்த்த நடிப்பால ஃபேமிலி மற்றும் யூத் ஆடியன்ஸ் மனசுல சிம்மாசனமிட்டு உட்கார்ந்த ஷாலினி, ஹீரேயினா அஞ்சே தமிழ்ப் படங்களுடன் ஷார்ட் பீரியட் மட்டுமே சினிமா களத்துல நடிச்சிருந்தாலும், டாப் ஸ்டாராதான் ஜொலிச்சாங்க. எத்தனையோ நடிகைகள், பிரேக்குக்குப் பிறகு கம்பேக் கொடுத்திருந்தாலும், இப்போவரைக்கும் ‘நோ ரீ-என்ட்ரி’ங்கிறதுல ஷாலினி உறுதியா இருக்காங்க.

சினிமால நடிக்கலைனாலும், ஷாலினி இப்பவும் பிஸிதான். தன் பிள்ளைகள் அனோஷ்கா, ஆத்விக் ரெண்டு பேருக்கும் சூப்பர் மாம்-ஆக இருக்காங்க. அதேமாதிரி தனக்குப் பிடிச்ச பேட்மிட்டன் விளையாட்டுல மாநில அளவிலான போட்டிகள்ல கலந்துக்கிட்டு பதக்கங்களை வென்றாங்க. ஐ.பி.எல் போட்டிகள் சென்னையில நடக்கும்போதெல்லாம் குழந்தைகளோட சேப்பாக்கம் ஸ்டேடியம் போய், லைவ் மேட்ச் பார்த்து என்ஜாய் பண்ணுவாங்க. போட்டோகிராபி சார்ந்த கோர்ஸையும் படிச்சிருக்காங்க. இவங்க சிஸ்டர் ஷாமிலியும், அக்கா ஷாலினியைப்போலவே குழந்தை நட்சத்திரமா சக்சஸ்ஃபுல்லா இருந்தவங்கதான். தன் பிள்ளைகள் மற்றும் தங்கை ஷாமிலியோட எடுத்துக்கிற க்யூட் போட்டோக்களை சோஷியல் மீடியாவுல போஸ்ட் பண்றது இவங்க வழக்கம்.

பேட்மிட்டன் விளையாடும் ஷாலினி…

இது எல்லாத்துக்கும் மேல, தான் காதலிச்சு கரம் பிடிச்ச நடிகர் அஜித்துடன் ஷாலினி ரொம்ப அழகா, அன்பா, ‘ஸோ க்யூட்’னு சொல்ற அளவுக்கு வாழ்ந்துட்டு வர்றாங்க. நடிப்பைத் தாண்டி… கார் ரேசிங், பைக் டிராவலிங், ஹெலிகாப்டர் ரைடிங்னு அஜித், தனக்குப் பிடிச்ச விஷயங்களை எக்ஸ்ப்ளோர் பண்றதுக்கு ஷாலினி கொடுக்குற சப்போர்ட் அதிகம். கொஞ்ச நாளைக்கு முன்பு, அஜித் ‘விடாமுயற்சி’ ஷூடிங்குக்காக ஆஜர்பைஜான் நாட்டுல இருந்திருக்கார். அப்போ, சென்னையில ஷாலினிக்கு அறுவைசிகிச்சை ஒண்ணு நடந்திருக்கு. மனைவியைப் பார்க்க உடனே சென்னைக்குப் பறந்தடிச்சு வந்தார் அஜித்.

மருத்துவமனையில தானும் அஜித்தும் கைகோத்து இருக்கிற ஒரு போட்டோவை சோஷியல் மீடியாவுல ஷேர் பண்ணியிருந்த ஷாலினி, ‘Love you forever’னு கேப்ஷன் போட்டிருந்தாங்க. கிட்டத்தட்ட 25 வருஷங்களாகியும், தங்களின் காதலும் அன்பும் துளியும் குறையவே இல்லைங்கிறதை அந்த போட்டோ சொல்லாம சொல்லுச்சு.

குடும்பத்தினருடன் ஷாலினி

90-களின் ஹீரோயினா அறியப்பட்டாலும், தன் க்யூட் அண்டு ஸ்வீட் அணுகுமுறையால இப்போவரைக்கும் தமிழ் மக்களின் பிரியத்திற்குரிய பெண்ணா இருக்கும் நடிகை ஷாலினிக்கு தாராளமா வைக்கலாம், அன்பும் மதிப்பும் கலந்த சிநேகமான சல்யூட்!

– நாயகிகள் வருவார்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.