அன்னபூர்ணா விவகாரம்: `இதை மேலும் தொடர வேண்டாம்…!' – பாஜக-வினருக்கு வானதி வேண்டுகோள்

கோவையில் நேற்று முன்தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், தொழில்துறை பிரமுகர்களுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின்போது, அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜி.எஸ்.டி குறித்து கோரிக்கை வைக்கும் வீடியோ வைரலானது. அதன் பின்னர், அன்னபூர்ணா சீனிவாசன் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் முன்னிலையில் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ வைரலாகவே, `கோரிக்கை வைத்ததற்காக மன்னிப்பு கேட்க வைப்பதா’ என இந்த விவகாரம் பெரும் விவாதப்பொருளானது.

கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டபோது

மேலும், ராகுல் காந்தி, கனிமொழி, ஜோதிமணி, சீமான் ஆகியோர் இந்த விஷயத்தில் பா.ஜ.க-வுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், அன்னபூர்ணா சீனிவாசன் தான் தாமாக முன்வந்து மன்னிப்பு கேட்டதாக வானதி சீனிவாசன் விளக்கமளிக்க, மறுபக்கம் லண்டனிலிருந்து அண்ணாமலை, தனிப்பட்ட உரையாடல் வீடியோவை பா.ஜ.க செயல்பாட்டாளர்கள் பகிர்ந்ததற்காக மன்னிப்பு கேட்பதாக ட்வீட் செய்தார். இந்த நிலையில், இதை மேலும் தொடர வேண்டாம் என பா.ஜ.க தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கும் வானதி சீனிவாசன், `வழக்கம் போல தங்கள் மடைமாற்றும் அரசியலைத் துவக்கியுள்ள தி.மு.க-வினருக்கு கண்டனம்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் வானதி சீனிவாசன், “கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தொழில் அமைப்பு நிர்வாகிகளுடனான கலந்துரையாடலில், தான் நட்பு ரீதியாகக் கூறிய கருத்துக்களை I.N.D.I கூட்டணிக் கட்சிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காகப் பொய்யாகத் திரித்துக் கூறி விளம்பரப்படுத்துவதை நினைத்து வருந்திய, அன்னபூர்ணா உணவகத்தின் நிறுவனர் சினிவாசன், தாமாக முன்வந்து தான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று கூறியதை, வழக்கம்போல் திரித்துப் பேசி அரசியல் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், `GST பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்கிறேன். ஆனால், பொது வாழ்க்கையில் உள்ள ஒரு பெண்மணியின் உணவுப் பழக்கத்தை இப்படி பொதுவெளியில் பேசு பொருளாக்கலாமா?’ என்று தனது வருத்தத்தைத் தான் அவரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

வானதி சீனிவாசன்

இதில் யாரும் தனது அதிகாரத்தையோ அரசியல் பொறுப்பையோ முன்னிறுத்தி எதுவும் பேசவில்லை. ஆனால், பரம்பரை பரம்பரையாகப் பொய் பிரசாரத்தின் மூலம் வெறுப்பரசியல் செய்யும் I.N.D.I கூட்டணிக் கட்சிகள், இந்த விவகாரத்தை தங்கள் இஷ்டம் போல திரித்துப் பொய் அவதூறுகளைப் பரப்ப முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விவகாரத்தில் மாநில தலைவர் அண்ணாமலையும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதனால், இந்த விவகாரத்தை மேற்கொண்டு தொடராமலும், யார் மனதையும் புண்படுத்தாமலும் இருக்க பா.ஜ.க தொண்டர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.