சென்னை: இனி வாட்ஸ்அப் செயலியிலும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போலவே ஸ்டேட்டஸ்களை லைக் செய்யும் புதிய அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியின் வருகைக்குப் பிறகு மற்ற சமூக வலைதளங்களில் அதற்கு ஏற்ப புதிய அம்சங்கள் அறிமுகமாவது வாடிக்கையாகி விட்டது. இளைய தலைமுறையினர் அதிக அளவில் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராமில் இருக்கும் பல்வேறு அம்சங்களை வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் செயலிகளிலும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது அவற்றின் தாய் நிறுவனமான மெட்டா.
அந்த வகையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பாணியில் தற்போது ஸ்டேட்டஸ்களுக்கு ரியாக்ட் செய்யும் வசதியை வாட்ஸ்-அப்பில் கொண்டு வந்துள்ளது மெட்டா நிறுவனம். முன்னதாக வாட்ஸ்அப்பில் வெறுமனே ஸ்டேட்டஸ்களை பார்க்க மட்டுமே இயலும். தேவையென்றால் அவற்றுக்கு ரிப்ளை செய்து கொள்ளலாம். இந்த சூழலில் தற்போது ஸ்டேட்டஸ்களுக்கு லைக் செய்யும் வசதியை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாட்ஸ்அப் பயனர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற தளங்களில் சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த ரியாக்சன் எமோஜி, இதில் வாட்ஸ்அப்பின் நிறமான பச்சை வண்ணத்தில் வருகிறது. தற்போது இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும் வெப் வாட்ஸ்அப்பில் இந்த அம்சம் வரவில்லை.