புதுடெல்லி: சிபிஐ கூண்டில் அடைக்கப்பட்ட கிளி என்ற கருத்தை மாற்றி அது கூண்டில் அடைக்கப்படாத பறவை எனக் காட்ட வேண்டும் என்று டெல்லி முதல்வர் கைது விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் இன்று (செப்.13) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவினை பிறப்பித்தது.
ஜாமீன் உத்தரவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது சட்டப்பூர்வமானது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு நீதிபதிகள் தனித்தனியாக அதே நேரத்தில் ஒருமித்த தீர்ப்பினை வழங்கினர். அரவிந்த் கேஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது சட்டவிரோதமானது இல்லை என்று நீதிபதி சூரியகாந்த் தெரிவித்தார். நீதிபதி உஜ்ஜல் புனியன், “சிபிஐ-ன் கைது அது அளித்த பதில்களை விட அதிக கேள்விகளையே எழுப்புகிறது” என்றார்.
நீதிபதி சூரிய காந்த் கூறுகையில், “நீண்ட காலம் சிறையில் இருப்பது சுதந்திரத்துக்கு பிரச்சினையாக இருக்கும். நீதிமன்றங்கள் பொதுவான சுதந்திரங்களை நோக்கிச் செல்கின்றன. அரவிந்த் கேஜ்ரிவாலை ரூ.10 லட்சம் பிணை பத்திரத்துக்கு உட்பட்டு பிணையில் விடுவிக்க நாங்கள் உத்தரவிடுகிறோம்.
வேறு ஒரு வழக்கில் காவலில் உள்ள ஒருவரை மீண்டும் கைது செய்வதில் எந்தத் தடையும் இல்லை. இந்த கைதுக்கான தேவை குறித்து சிபிஐ தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது. பிரிவு 41(a)(3)மீறப்பட்டவில்லை. எனவே இந்தக் கைது சட்டபூர்வமானதே.
அரவிந்த் கேஜ்ரிவால் இந்த வழக்கு குறித்து பொதுவான கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது. விலக்கு அளிக்கப்பட்டால் அன்றி விசாரணை நீதிமன்றத்தில் அனைத்து விசாரணைக்கும் ஆஜராக வேண்டும். அமலாகக்கத் துறை வழக்கின் நிபந்தனைகள் இந்த வழக்குக்கும் பொருந்தும்” என்று தெரிவித்தார்.
நீதிபதி உஜ்ஜல் புனியன் தனது உத்தரவில், “சிபிஐ-ன் கைதுக்கான தேவை மற்றும் அவசியம் குறித்து அது அளித்த பதிலை விட அதிகமான கேள்விகளே எழுகிறது. மார்ச் 2023ல் கேஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தாலும் அவரை கைது செய்ய வேண்டும் என்று சிபிஐ யோசிக்கவில்லை. கேஜ்ரிவாலின் அமலாக்கத் துறை கைதில் அவர் ஜாமீன் வழங்கப்படும் வரை அப்படி கருதவும் இல்லை. சிபிஐ-ஆல் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நேரம் பல கேள்விகளை எழுப்புகிறது. அந்தக் கைது அமலாக்கத் துறை வழக்கில் அவர் ஜாமீனில் வருவதைத் தடுப்பதற்காகவே நடந்தது என்று எண்ணத் தோன்றுகிறது.
சிபிஐ கூண்டில் அடைக்கப்பட்ட கிளி என்ற கருத்தை மாற்றி அது கூண்டில் அடைக்கப்படாத பறவை எனக் காட்ட வேண்டும். சிபிஐ சீசரின் மனைவியைப் போல சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அமலாக்கத் துறையின் வழக்கில் கேஜ்ரிவால் ஜாமீனில் இருக்கும் போது அவரை சிறையில் அடைத்து வைத்திருப்பது நீதியை கேலிக்கூத்தாக்குவது போலாகிவிடும்” என்று தெரிவித்தார்.