ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் நடந்த தீவிரவாதிகளுடனான என்கவுன்ட்டரில் ராணுவ வீரர்கள் இருவர் வீர மரணமடைந்தனர். இருவர் காயமடைந்துள்ளனர். கிஷ்த்வார் மாவட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இதுதவிர பாரமுல்லா மாவட்டத்தின் சாக் டப்பர் பகுதியில் ஒரு கட்டிடத்தில் 2, 3 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகத் தகவல் வந்ததையடுத்து அங்கும் ஒரு என்கவுன்ட்டர் நடந்து வருகிறது. பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) காஷ்மீரில் பிரம்மாண்ட பிரச்சாரப் பேரணி மேற்கொள்ள விருக்கும் நிலையில் நடைபெற்ற இந்த என்கவுன்ட்டர் கவனம் பெற்றுள்ளது.
பாரமுல்லா என்கவுன்ட்டர் போல் கிஸ்த்வார் துப்பாக்கிச் சூடு சம்பவமும் ரகசியத் தகவலைத் தொடர்ந்தே மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்ததை உணர்ந்த தீவிரவாதிகள் வனப்பகுதிக்குள் பதுங்கியிருந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். அவர்கள், நாயப் சுபேதார் விபன் குமா, மற்றும் சிப்பாய் அரவிந்த் சிங் அன அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இரண்டு வீரர்கள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிஷ்த்வாரில் என்கவுன்ட்டர் பகுதி ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
3 கட்டங்களாக தேர்தல்: ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டப்பேரவைகளுக்கு செப்.18, 25 மற்றும் அக்.1 என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் டோடா மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சார பேரணி மேற்கொள்கிறார். கடந்த 42 ஆண்டுகளில் டோடாவுக்கு செல்லும் முதல் பிரதமராக மோடி இருக்கிறார். பிரதமர் மோடி இன்று காஷ்மீரில் பிரம்மாண்ட பிரச்சாரப் பேரணி மேற்கொள்ள விருக்கும் நிலையில் நடைபெற்ற இந்த என்கவுன்ட்டர் கவனம் பெற்றுள்ளது. பிரதமரின் வருகையை ஒட்டி காஷ்மீரில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.