இசை ஆட்கொள்ளாத மனிதன் இருக்க முடியுமா!? இசைக்கலைஞர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்தி போலியான பாடல்களை உருவாக்கி, அவற்றை Spotify, Apple Music மற்றும் Amazon Music போன்ற இசை சேவை தளங்களில் போலியான கேட்போர் (bot) மூலம் ஸ்ட்ரீம் செய்து, 10 மில்லியன் டாலர் ராயல்டி பணம் பெற்றுள்ளார்.
இந்திய மதிப்பில் சுமார் 83 கோடி. ஸ்ட்ரீமிங்கில் மோசடி செய்ததற்காக அவர்மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, செப்டம்பர் 11-ம் தேதி கைதாகியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 52 வயதான மைக்கேல் ஸ்மித், இசை துறையில் அதிகப் பணம் சம்பாதிப்பதற்காக ‘AI இசை நிறுவன CEO மற்றும் இசை விளம்பரதாரர்’ ஆகிய இரண்டு அடையாளம் தெரியாத கூட்டாளிகளின் உதவியுடன் AI-ஐப் பயன்படுத்தி நூறாயிரக்கணக்கான போலி பாடல்களையும், கற்பனையான இசைக்குழு பெயர்களையும் உருவாக்கி, இந்த AI-உருவாக்கிய டிராக்குகளின் ஸ்ட்ரீம் எண்ணிக்கையை செயற்கையாக உயர்த்திக் காட்டியிருக்கிறார். 10,000 போலி சுயவிவரங்களை உருவாக்கி, போட்-களைப் பயன்படுத்தி, ஏழு வருடங்களில் 10 மில்லியன் டாலர் ராயல்டியைப் பெற்றுள்ளார்.
“காலஸ் போஸ்ட்,” “கலோரி ஸ்க்ரீம்ஸ்” மற்றும் “கால்வினிஸ்டிக் டஸ்ட்” போன்ற கலைஞர்களின் பெயர்கள் மற்றும் “ஜிகோடிக் வாஷ்ஸ்டாண்ட்ஸ்,” “ஜிமோடெக்னிகல்” மற்றும் “ஜிகோஃபில்லம்” போன்ற பாடல் தலைப்புகள் மூன்று ஸ்ட்ரீமிங் சேவைகளில் அதிகமாக ஸ்ட்ரீம் செய்யப்பட்ட பாடல்கள் ஆகும். இந்த புனையப்பட்ட படைப்புகள், முக்கிய ஸ்ட்ரீமிங் தளங்களில் தரவரிசையில் முன்னேறி, முறையான கலைஞர்களுக்குச் சென்றிருக்க வேண்டிய ராயல்டிகளைத் ஸ்மித் பெற்றுள்ளார்.
ஸ்மித் இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் பாடல்களை சட்டப்பூர்வமாக ஸ்ட்ரீம் செய்யும் உரிமைகளை வைத்திருப்பவர்களுக்குச் செலுத்த வேண்டிய மில்லியன் கணக்கான ராயல்டிகளை மோசடியாகப் பெற்றிருக்கிறார். பணமோசடி மற்றும் ஸ்ட்ரீம் சதி ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, இந்தக் குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இது முற்றிலும் தவறு மற்றும் பைத்தியக்காரத்தனம் … எந்த மோசடியும் நடக்கவில்லை!” என்று ஸ்மித் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும் இசை சமூக நெட்டிசன்கள் சிலர், இந்த விஷயத்தில் ஸ்மித்தின் அறிவைப் பாராட்டி ஆதரித்தும் வருகின்றனர்.