பீகார் மாநிலம், ஷிவானைச் சேர்ந்த 11 வயது சிறுமி, அவருடைய பெற்றோர், தாத்தாவுடன், டெல்லி செல்வதற்காக பராவ்னி ரயில் நிலையத்திலிருந்து, ஹம்சஃபர் எக்ஸ்பிரஸில் புறப்பட்டார். இரவு 11:30 மணியளவில், சிறுமியின் தாயார் கழிவறை சென்றிருக்கிறார். அவர் திரும்பி வரும்போது, அந்தச் சிறுமி, ஓடிச் சென்று அவரைக் கட்டிப்பிடித்து அழுதிருக்கிறார். உடனே மகளை அழைத்துச் சென்று விசாரித்தபோது, ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக அந்தச் சிறுமி கூறியிருக்கிறார்.
உடனே அந்தப் பெண், மற்றொரு ஏசி பெட்டியில் பயணம் செய்த தன் கணவர், மாமனார் மற்றும் ரயிலில் இருந்த சக பயணிகளிடம் இது குறித்து தெரிவித்திருக்கிறார். ரயில் லக்னோவில் உள்ள ஐஷ்பாக் சந்திப்பை அடைந்தபோது, குறிப்பிட்ட அந்தப் பெட்டியில் இருந்த சில பயணிகளும், அந்த சிறுமியின் பெற்றோரும், சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் ரயில்வே ஊழியரைப் பிடித்து, கடுமையாக தாக்கத் தொடங்கியிருக்கின்றனர். ரயில் கான்பூரை அடையும்வரை சுமார் 1:30 மணி நேரம் தாக்கியிருக்கின்றனர்.
வியாழக்கிழமை அதிகாலை 4:35 மணியளவில், ரயில் கான்பூர் சென்ட்ரலை அடைந்தபோது, ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்திருக்கின்றனர். உடனே ரயில்வே காவல்துறை அதிகாரிகள், தாக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பு, வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை, “உயிரிழந்தவர், பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சமஸ்த்பூர் கிராமத்தில் வசிக்கும் குமார். சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக குமாரின் மாமா முசாபர்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இது தொடர்பாக குமாரின் மாமா செய்தியாளர்களிடம் பேசியபோது, “குமார் இதுபோல தவறாக நடந்து கொள்பவர் கிடையாது. இந்தக் கொலையில் சதி இருப்பதாகவே தெரிகிறது. இது தொடர்பாக கண்டிப்பாக சட்டப்போராட்டம் நடத்துவேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த விவகாரம் தற்போது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.