காவல்துறையினர் 129 பேருக்கு அண்ணா பதக்கங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 129 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, ஊர்க்காவல் படை மற்றும் விரல் ரேகைப் பிரிவு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்கள் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தமிழக முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, காவல் துறையில் தலைமைக் காவலர் முதல், காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல், துணை இயக்குநர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல், உதவி சிறை அலுவலர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல்படையில் ஊர்க்காவல் படைவீரர் முதல், படைத்தளபதி வரையிலான 5 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும் மற்றும் விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும், அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் ‘தமிழக முதல்வரின் அண்ணா பதக்கங்கள்’ வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தில் பணியாற்றும் முன்னணி தீயணைப்பாளர் எஸ்.மந்திரமூர்த்தி, மற்றும் தீயணைப்போர் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் கடந்த 2023 டிசம்பர் 18-ம் தேதி இரவு தாமிரபரணி ஆற்றின் கரையில் வெள்ளம் புகுந்த கிராமங்களில் இருந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலையிலும், மற்றும் மீட்பு பணி சவாலாக இருந்த நிலையிலும், படகுகள் மூலம் சுமார் 448 பேரை மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு செயலை பாராட்டி இருவருக்கும் ‘தமிழக முதல்வரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம்’ வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த பதக்கங்கள் முதல்வரால், பின்னர் ஒரு விழாவில் வழங்கப்படும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.