`தென்னகத்தின் ஆக்ஸ்ஃபோர்ட்’ என வர்ணிக்கப்படும் நெல்லை மாநகர எல்லையில் உள்ள பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டு கடந்த பழைமையான இந்தக் கல்லூரியில் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் படித்து வருகிறார்கள்.
சுமார் 4,000-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படிக்கும் இந்தக் கல்லூரியில் பயிற்றுவிக்கும் இரு பேரசிரியர்கள், தங்களிடம் பயிலும் மாணவிக்கு செல்போனில் செக் டார்ச்சர் கொடுத்ததுடன் மது குடிக்க வருமாறு அழைத்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4-ம் தேதி இரவு சமூகவியல் துறை பேராசிரியர்களான செபாஸ்டின் (40), பால்ராஜ் (40) ஆகிய இருவரும் நெல்லை மாநகரப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மது குடித்துள்ளனர்.
மதுக்கூடத்தில் நள்ளிரவு வரை மது குடித்த இருவருக்கும் போதை தலைக்கேறியுள்ளது. ஒரு கட்டத்தில், தனது துறையில் படிக்கும் குறிப்பிட்ட மாணவி ஒருவருக்கு போன் செய்த பேராசிரியர் பால்ராஜ், அந்த மாணவியிடம் ஆபாசமாகப் பேசியுள்ளார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போது செல்போனை பிடுங்கிய மற்றொரு பேராசிரியரான ஜெபஸ்டின், “நாங்கள் இருவரும் இப்போது மது குடித்துக் கொண்டிருக்கிறோம். நீயும் உடனே இங்கே வா.. நாம் சேர்ந்து மது குடிக்கலாம்” என அழைத்துள்ளார்.
அதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அழுதபடி தனது பெற்றோரிடம் நடந்த விவரங்களைத் தெரிவித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணையைத் தொடங்கிய நிலையில், மறுநாள் காவல் நிலையம் வந்த பெற்றோர், தங்கள் மகளின் எதிர்கால நலன் கருதி புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக எழுதிக் கொடுத்தனர். அதனால் இந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டது.
கல்லூரி பேராசிரியர்களின் அருவருப்பூட்டும் இந்தச் செயல் வெளியில் கசிந்ததால், பொதுமக்கள் இது குறித்துப் பேசத் தொடங்கினர். அத்துடன், சமூக வலைதளங்களிலும் இந்த விவகாரம் பரவத் தொடங்கி சர்ச்சையானது. அதனால் செய்வதறியாது திகைத்த போலீஸார், உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து உயரதிகாரிகளின் தலையீட்டின் பேரில் இது குறித்து மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.
போலீஸார் நடத்திய விசாரணையில் இரு பேராசிரியர்களும் நள்ளிரவில் மது குடித்துவிட்டு செல்போனில் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தது உறுதியானது. அதைத் தொடர்ந்து அவர்கள் மீது பாளையங்கோட்டை காவல் நிலையத்தில், இந்தியத் தண்டனை சட்டம் 74, 75, 79(5) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த பேராசிரியர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேந்த பேராசிரியர் செபாஸ்டினை அவரது வீட்டில் வைத்து போலீஸார் கைது செய்தனர். மற்றொரு பேராசிரியரான பால்ராஜூக்கு போலீஸார் வரும் தகவல் முன்கூட்டியே தெரிய வந்ததால் தூத்துக்குடியில் உள்ள தனது வீட்டிலிருந்து தப்பிவிட்டார்
தலைமறைவாக இருக்கும் பால்ராஜை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பேராசிரியர்கள் இருவரையும் பணி நீக்கம் செய்துள்ளதாக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே பாளையங்கோட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் பள்ளி மாணவனுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக ஆசிரியர்கள் இருவர் கைதாகி சில தினங்களுக்குள் நடந்துள்ள இந்த சம்பவம் பாளையங்கோட்டை மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.