சிவகாசி: சிவகாசியில் 8 ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்ட அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவியர் விடுதி, கல்லூரி மாணவியர் விடுதியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னரும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால், இடநெருக்கடி காரணமாக மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சிவகாசி சிறுகுளம் கண்மாய் அருகே இயங்கி வந்த அரசு ஆதி திராவிடர் பள்ளி மாணவியர் விடுதி, கடந்த 2016-ம் ஆண்டு நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட போது இடித்து அகற்றப்பட்டது. அதன்பின் மாணவியர் விடுதி சிவகாசி சாட்சியாபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு மாற்றப்பட்டு, மாணவர் விடுதி வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. 2023ம் ஆண்டு முதல் ஆதிதிராவிடர் பள்ளி மாணவியர் விடுதி, கல்லூரி மாணவியர் விடுதியாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் மாணவர் விடுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட மாணவியர் விடுதி தற்போது வாடகை வீட்டில் இயங்கி வருகிறது. இந்த விடுதியில் சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 40க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் உட்பட 50க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த வாடகை இரு அறை, ஒரு ஹால், 3 கழிப்பறை மட்டுமே உள்ளது.
இதனால் மாணவர்கள் பொருட்களை வைப்பதற்கும், தங்குவதற்கும் போதிய இடவசதி இல்லாததால் நெருக்கடியில் வசித்து வருகின்றனர். போதிய கழிப்பறை மற்றும் குளியலறை இல்லாததால் மாணவிகள் புறப்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் கல்லூரிக்கு செல்வதில் சிரமம் நிலவுகிறது. மேலும் அடிக்கடி கழிவுநீர் தொட்டி நிரம்பி, தங்கும் அறைக்கும் கழிவுநீர் வந்து விடும் சூழல் நிலவுகிறது. இதனால் அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான விடுதி வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் கூறுகையில்: “வீட்டில் விடுதி செயல்படுவதால், 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்குவதால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் கழிப்பறை, குளியலறை மற்றும் துணி துவைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. தங்கும் இடத்திலேயே உடைமைகளை வைத்திருப்பது, உணவு உண்ணுவது, படிப்பது போன்ற செயல்களை செய்ய வேண்டி உள்ளதால் மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். போதிய இட வசதிகளுடன் கூடிய மாணவிகளுக்கு பாதுகாப்பான மாற்று இடம் தேர்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமேஷிடம் கேட்ட போது: “சிவகாசி ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதிக்கு சொந்த கட்டிடம் கட்ட திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதற்காக சிவகாசி அரசு கல்லூரி அரசு இடம் கையகப்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இட நெருக்கடி உள்ளது. விரைவில் மாணவிகளுக்கு பாதுகாப்பான அடிப்படை வசதிகளுடன் கூடிய மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, விடுதி இடமாற்றம் செய்யப்படும்” என்றார்.