டெஹ்ரான்,
ஈரானின் துணை ராணுவ புரட்சி காவல்படையால் உருவாக்கப்பட்ட ‘சம்ரான்-1’ செயற்கைக்கோள், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ. தகவல் தெரிவித்துள்ளது.
மொத்தம் 60 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், தற்போது பூமியில் இருந்து 550 கி.மீ. உயர சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் திட எரிபொருளால் இயக்கப்படும் ‘கயீம்-100’ என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
விண்வெளி வன்பொருள் மற்றும் மென்பொருளைச் சோதிப்பதே இந்த செயற்கைக்கோளின் முக்கியப் பணி என்றும், செயற்கைக்கோளில் இருந்து தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு சிக்னல் பெறப்பட்டதாகவும் ஐ.ஆர்.என்.ஏ. தெரிவித்துள்ளது.
ஈரான் முன்னாள் அதிபர் இப்ராகிம் ரெய்சி கடந்த மே மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அடுத்த அதிபராக மசூத் பெசெஸ்கியன் பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஈரானில் இருந்து விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.