அமெரிக்க அதிபர் தேர்தல்: விண்வெளியில் இருந்து வாக்களிக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்

வாஷிங்டன்,

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அவர்கள் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. விண்கலத்தின் த்ரஸ்டர்களில் கோளாறு, வாயு கசிவும் கண்டறியப்பட்டது. இதனால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

கோளாறு சரிசெய்யபட்டபோதும் இருவரையும் ஸ்டார் லைனர் விண்கலத்திலேயே பூமிக்கு அழைத்து வரவேண்டாம் என நாசா முடிவெடுத்தது. இருவரையும் பூமிக்கு கொண்டுவர எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் பயன்படுத்தப்பட உள்ளது. க்ரு டிராகன் விண்கலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட உள்ளது. இந்த விண்கலம் மூலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியில் இருந்து பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

முன்னதாக சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தபடி இருவரும் நேரடியாக செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர். அப்போது பேசிய சுனிதா வில்லியம்ஸ், “விண்வெளி மையத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அனைத்துக்கும் தயாராகவே வந்திருக்கிறேன். அதிபர் தேர்தலில் வாக்களிப்பது குடிமக்களாகிய நமக்கு ஒரு மிக முக்கியமான கடமையாகும். மேலும் விண்வெளியில் இருந்து வாக்களிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.