‘தவறான அரசியல் புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி…’ – கோவை அன்னபூர்ணா உணவகம் விளக்கம்

சென்னை: “தனிப்பட்ட சந்திப்பு தொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது, தவறான புரிதலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு தமிழக பாஜக மன்னிப்பு கோரியுள்ளது. வீடியோ வெளியிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையற்ற அனுமானங்கள், தவறான அரசியல் புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம்” என்று கோவை அன்னபூர்ணா உணவகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அன்னபூர்ணா நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “கோவையில் கடந்த செப்டம்பர் 11-ம் தேதி புதன்கிழமை அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் எம்எஸ்எம்இ மற்றும் வர்த்தக சபை பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் எங்கள் நிர்வாக இயக்குநர் டி.சீனிவாசன் கலந்துகொண்டு, உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் விதிக்கப்படும் மாறுப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக குரல் எழுப்பினார். இது தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து, மறுநாள் தனது சொந்த விருப்பத்தின் பேரில் தனிப்பட்ட முறையில் நிதியமைச்சரை நேரில் சந்தித்து, தான் பேசியது குறித்து விளக்கம் அளித்தார். இந்த தனிப்பட்ட சந்திப்பு தொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது தவறான புரிதலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு தமிழக பாஜக மன்னிப்பு கோரியுள்ளது. வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு நன்றி. தேவையற்ற அனுமானங்கள், தவறான அரசியல் புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம். இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துவிட்டு வழக்கமான பணியை தொடர விரும்புகிறோம். மேலும், எங்களது விசுவாசமான வாடிக்கையாளர்கள் மற்றும் ஆதரவளித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கருத்தும், வானதி பதிலடியும்: “அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ஜி.எஸ்.டி. குறித்த தொழில்முனைவோரின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தவரை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையாண்ட விதம் வெட்கப்பட வேண்டிய ஒன்று’ என்று கூறியிருக்கிறார். கோவையில் தொழில்கள் நசிந்து வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும், கோவையின் தொழில் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவி செய்யாத தமிழகத்தின் முதல்வரான மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். கொங்கு மண்டலம் திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் மன்னிக்காது” என்று என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

முன்னதாக, கோவை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதி அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கோரியதாக வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதன் விவரம்: ‘ஆட்சியில் உள்ளவர்களிடம் கோரிக்கை வைத்தால் அவமதிப்பு’ – அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தலைவர்கள் கண்டனம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.