“அரசியல் கணக்குப் போட்டு மது ஒழிப்பு மாநாடு நடத்தவில்லை” – திருமாவளவன் விளக்கம்

மதுரை: “அரசியல் கணக்குப் போட்டு மது ஒழிப்பு மாநாடு நடத்தவில்லை,” என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் மனித உரிமை காப்பாளர் தியான் சந்த் கார் என்பவருக்கு நினைவேந்தல் மற்றும் அவரது படத் திறப்பு விழா இன்று (செப்.14) நடைபெற்றது. இதில் பங்கேற்க விசிக தலைவர் தொல். திருமாவளவன் மதுரை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “பொதுவாக தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்த காலத்தில் இருந்து மது ஒழிப்பு குறித்து பேசுகிறேன். கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என, 1999-ல் பேசினேன். இதை நினைவுபடுத்தி செங்கல்பட்டில் நான் பேசியதை எனது, அட்மின் எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஏன் அதை நீக்கினார் எனத் தெரியவில்லை. இன்னும் எனது அட்மினை தொடர்பு கொண்டு பேசவில்லை.

அதிகாரம் எளிய மக்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதுதான் எப்போதும் எங்கள் கோரிக்கை. எனக்கு உண்மையில் அரசாங்கத்தில் பங்கு வேண்டும் என நினைத்திருந்தால் தேர்தல் நேரத்தில் கேட்டிருப்பேன். இப்போது கேட்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் அரசியலோடு இதை முடிச்சு போடக் கூடாது. காவிரி நீர், ஈழ தமிழர் விவகாரங்களில் அனைவரும் இணைவது போல் மது ஒழிப்பிலும் இணையலாம். பாமகவுடன் எங்களுக்கு கசப்பான அனுபவங்கள் இருப்பதால் அவர்களை அழைக்கவில்லை. இப்போதும் நாங்கள் திமுக கூட்டணியில் உள்ளோம். கூட்டணியில் தொடர்கிறோம். எவ்வித பிரச்சினையும் இல்லை.

மதுரையில் விசிக கொடி கம்பம் அமைக்க, ஆட்சியர் சங்கீதா அனுமதி அளிக்கவில்லை. விசிகவுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தொடர்ந்து செயல்படுகிறார். மீண்டும் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கேட்டு அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அனுமதி கிடைத்த பிறகு கொடிக் கம்பத்தை வைப்போம். மதுவின் கொடுமையால் கண்ணீர் விட்டு கதறும் தாய்மார்களுக்கென மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படுகிறது. அரசியல் கணக்குப் போட்டு இந்த மாநாட்டை நடத்தவில்லை. அப்படி நடத்தினால் அதை விட அசிங்கம் எனக்கு வேறில்லை. ஒரு சதவீதம் கூட இதில் தேர்தல் கூட்டணி கணக்கு இல்லை,” என்று அவர் கூறினார்.

இதனிடையே, “2016-ல் கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்திய கட்சி விசிக. இடங்கள் ஒதுக்கீடு அல்ல; அமைச்சரவையில் அதிகாரப் பங்கு வேண்டும் எனக் கேட்டோம்” என திருமாவளவன் பேசியிருந்த பழைய வீடியோ, அவரது பக்கத்தில் இருந்து உடனடியாக நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் அந்த வீடியோ இப்போது அங்கு பகிரப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.