Megha Akash: செண்டை மேளம், தவில் நாதஸ்வரம் இசை மழையில் மேகா ஆகாஷ் – சாய் விஷ்ணு திருமணம்!

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் நடித்து வரும் நடிகை மேகா ஆகாஷ், தனது காதலன் சாய் விஷ்ணுவைக் கரம் பிடித்தார்.

தெலுங்கில் ‘லை’ என்ற படத்தின் மூலம் தன் சினிமா பயணத்தைத் தொடங்கிய மேகா ஆகாஷ், தமிழில் முதலில் கமிட்டான படம் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்த ‘ஒரு பக்கக் கதை’. இந்தப் படத்தை முடித்த கையோடு கௌதம் வாசுதேவ் மேனனின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’வில் தனுஷ் ஜோடியாக நடிக்க வாய்ப்பு அமைந்தது. இந்தப் படத்தின் ‘மறுவார்த்தை பேசாதே’, ‘விசிறி’ பாடல்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். இதைத் தொடர்ந்து ‘பூமராங்’, ‘அத்தாரின்டிகி தாரேதி’, ரஜினிகாந்த் நடிக்கும் ‘பேட்ட’ படத்திலும், பவன் கல்யாண் நடித்த ‘அத்தாரின்டிகி தாரேதி’ எனும் தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்புவுக்கு ஜோடியாகவும் நடித்து தமிழ்த் திரையுலகத்தின் கவனம் ஈர்த்தார். சமீபத்தில் அசோக் செல்வனுடன் ‘சபாநாயகன்’, விஜய் ஆண்டனியுடன் ‘மழைப் பிடிக்காத மனிதன்’ திரைப்படங்களில் நடித்திருந்தார்

மேகா ஆகாஷ் – சாய் விஷ்ணு

கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி மேகா ஆகாஷ் – சாய் விஷ்ணு இருவருக்கும் சத்தமில்லாமல் கேரளாவில் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. தற்போது மேகா ஆகாஷ், தான் காதலித்த சாய் விஷ்ணுவை திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் சென்னை, திருவான்மியூரிலுள்ள ஶ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் இன்று (செப்டம் 15ம் தேதி) காலை 11 மணிக்கு நடந்து முடிந்தது. மேகா ஆகாஷின் அம்மா கேரளா, அப்பா தெலுங்கு, மாப்பிள்ளை சாய் விஷ்ணு தமிழ் என்பதால் தமிழ், கேரளா, தெலுங்கு ஃபுயூஷன் ஸ்டைலில் இத்திருமணம் நடைபெற்றது. செண்டை மேளம், தவில், நாதஸ்வரம் இசைக்க இருவரும், இருவீட்டாரின் வாழ்த்து மழையுடன் திருமணம் செய்துகொண்டனர். மாப்பிள்ளை விஷ்ணு, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் – கற்பகம் தம்பதியின் மகன் என்பதால் திரைத்துறையினர் மட்டுமின்றி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இத்திருமணத்தில் பங்கேற்றிருந்தனர்.

நேற்று மாலை நடபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதுதவிர அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, ராஜகண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு எம்பி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பி.க்கள் விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத் உள்ளிட்டோர் இத்திருமணத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.