பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் செல்வராஜூ (48) ராஜராஜேஷ்வரி நகர் பாஜக எம்எல்ஏவும் திரைப்பட தயாரிப்பாளருமான முனிரத்னாவுக்கு எதிராக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், முனிரத்னா தன்னிடம் லஞ்சமாக ரூ.50 லட்சம் கேட்பதாகவும், அதை தர மறுத்தால் கொன்று விடுவதாகவும் மிரட்டினார் என்று குறிப்பிட்டார்.
இதனிடையே செல்வராஜூ வெளியிட்ட ஆடியோவில் பாஜக எம்எல்ஏ முனிரத்னா, ‘‘ரூ.50 லட்சத்தை ஒரு வாரத்துக்குள் தராவிட்டால், நடிகர் தர்ஷன் எப்படி ரேணுகா சுவாமியை அடித்துகொன்றாரோ அதேபோல உன்னைஅடித்துக்கொல்வேன்” என மிரட்டியுள்ளார். மேலும் பட்டியல் வகுப்பை சேர்ந்த செல்வராஜை அவரது சாதியின் பெயரை குறிப்பிட்டு இழிவாக சாடியுள்ளார்.
இந்த ஆடியோ ஊடகங்களில் வெளியாகி நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ராஜராஜேஷ்வரி நகர் போலீஸார் முனிரத்னா, அவரது உதவியாளர் அபிஷேக் உள்ளிட்ட 3 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று மாலை கார் மூலம் ஆந்திராவுக்கு சென்று கொண்டிருந்த முனிரத்னாவை கோலாரில் போலீஸார் கைது செய்தனர்.