பாரிஸ்,
ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இங்கிலாந்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து வருகின்றனர். இவர்களை தடுக்க இங்கிலாந்து அரசு முயற்சித்து வருகிறது. சட்டவிரோதமாக நுழைபவர்களை ருவாண்டா நாட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையிலும் இங்கிலாந்து அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், பிரான்சில் இருந்து கடல் வழியாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
பிரான்ஸ் – இங்கிலாந்து இடையேயான கடல் பகுதியில் இங்கிலீஷ் சேனல் வழியாக படகில் இங்கிலாந்திற்குள் நுழைய அகதிகள் நேற்று முயற்சித்தனர். அப்போது, அவர்கள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அகதிகள் 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
நடப்பு ஆண்டில் மட்டும் பிரான்சில் இருந்து இங்கிலாந்துக்குள் கடல்வழியாக சட்டவிரோதமாக நுழைய முயன்று ஏற்கனவே 43 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.