“இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது” – பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: “மூன்று பெரிய துறைமுகங்கள், பதினேழு சிறு துறைமுகங்கள் ஆகியவற்றுடன் கடல்சார் வணிகத்தின் முக்கிய மையமாக தமிழகம் மாறியுள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், “உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதற்கான இந்தியாவின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது” என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் சர்வதேச சரக்குப் பெட்டக முனையத் திறப்பு விழாவில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கிய இந்தியாவின் பயணத்தில், இன்று ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை இந்த நிகழ்ச்சி குறிக்கிறது. தூத்துக்குடி சர்வதேச சரக்குப் பெட்டக முனையம், இந்தியாவின் கடல் உள்கட்டமைப்பின் புதிய நட்சத்திரம். 14 மீட்டருக்கும் அதிகமான ஆழமான கச்சா எண்ணெய் தளம் மற்றும் 300 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த முனையம், வ.உ.சி. துறைமுகத்தின் திறனை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும். இந்தியாவின் கடல்சார் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை எழுத வ.உ.சி துறைமுகம் தயாராக உள்ளது.

புதிய முனையம், துறைமுகத்தில் தளவாட செலவுகளைக் குறைப்பதுடன், இந்தியாவுக்கு அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தும். முனையத்தின் முக்கிய சாதனைகளில் ஒன்று, பாலின பன்முகத்தன்மைக்கான அதன் அர்ப்பணிப்பு. இதன் ஊழியர்களில் 40% பெண்கள். இது கடல்சார் துறையில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியைக் குறிக்கிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் தமிழக கடலோரப் பகுதிகள் முக்கிய பங்காற்றியுள்ளன. மூன்று பெரிய துறைமுகங்கள் மற்றும் பதினேழு சிறு துறைமுகங்களுடன், தமிழக கடல்சார் வர்த்தகத்தின் முக்கிய மையமாக மாறியுள்ளது. துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க, வெளி துறைமுக சரக்குப் பெட்டக முனையத்தை உருவாக்க, இந்தியா ரூ. 7,000 கோடிக்கு மேல் முதலீடு செய்கிறது.

நிலையான மற்றும் முன்னோக்கு சிந்தனை வளர்ச்சிக்கான பாதையை இந்தியா உலகுக்குக் காட்டுகிறது. வ.உ.சி துறைமுகம் ஒரு பசுமை ஹைட்ரஜன் மையமாகவும், கடல் காற்றாலை மின்சக்திக்கான நோடல் துறைமுகமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தின் உலகளாவிய சவால்களை சமாளிப்பதில் இந்த முன்முயற்சிகள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும்.

சாலைகள், நெடுஞ்சாலைகள், நீர்வழிகள் மற்றும் வான்வழிகள் ஆகியவற்றின் பரந்த வலைப்பின்னலுடன், இந்தியா தற்போது நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய வர்த்தகத்தில் நாட்டின் நிலையை வலுப்படுத்துகிறது. உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியா ஒரு முக்கியப் பங்குதாரராக மாறி வருகிறது. இந்த வளர்ந்து வரும் திறன், நமது பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகும். இந்த உத்வேகம் விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும். இந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.