சிராஜ் கிடையாது… இந்த பாஸ்ட் பௌலருக்குதான் வாய்ப்பு – வங்கதேசத்தை போட்டுத்தாக்க திட்டம்

IND vs BAN, Team India Playing XI: வங்கதேச அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் வரும் செப். 19ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

இந்திய அணி கடைசியாக கடந்த மார்ச் மாதத்தில் டெஸ்ட் போட்டியை விளையாடியது. அதன்பின் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு தற்போது ஒரு நீண்ட டெஸ்ட் சீசனுக்கும், 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை நோக்கியும் தனது பயணத்தை தொடங்க உள்ளது. மறுமுனையில், வங்கதேச அணியோ பாகிஸ்தானுக்கு சென்று அந்த அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி, டெஸ்ட் தொடரை கைப்பற்றிய நம்பிக்கையுடன் இந்தியாவுக்கு வருகிறது. 

இந்தியாவின் வியூகம்

இதுவரை இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியை கூட வென்றிராத வங்கதேசம், இம்முறை திறன்மிக்க இளம் வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஆகியோரின் மீதான நம்பிக்கையில் இந்த தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறது. நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹாசன், முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், டஸ்கின் அகமது உள்ளிட்ட அனுபவ வீரர்கள் உள்ளனர். அதேபோல், மெஹதி ஹாசன் மிராஸ், நஹித் ராணா உள்ளிட்ட இளம் வீரர்களும் நம்பிக்கை அளிக்கின்றனர்.

அந்த வகையில், இரு அணிகளுக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்த தொடராகும். இந்த சூழலில், சென்னையில் கருப்பு மண் ஆடுகளத்திற்கு பதில் செம்மண் ஆடுகளத்தை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, வங்கதேச வீரர்களுக்கு பழக்கப்பட்ட கருப்பு மண் ஆடுகளத்தை வழங்காமல் இந்தியாவின் வியூகத்திற்கு சாதகமான செம்மண் ஆடுகளத்தை வழங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், சுழற்பந்துவீச்சை நன்றாக விளையாடக்கூடியவர்களில் வங்கதேச வீரர்களும் கைத்தேர்ந்தவர்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

அறிமுகமாகும் யாஷ் தயாள்?

தற்போது ஆடுகளத்தில் ஏற்கெனவே புற்கள் அதிகம் காணப்படும் நிலையில், போட்டி நடைபெறும் 19ஆம் தேதி அது இன்னும் வளர வாய்ப்புள்ளது. எனவே, செம்மண் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு கூடுதல் சாதகத்தை அளிக்கும் என்பதாலும், இந்த புற்களின் சாதகத்தை பயன்படுத்துவதன் மூலமும் இந்தியா 3 வேகப்பந்துவீச்சாளர் – 2 சுழற்பந்துவீச்சாளர் வியூகத்திற்கு செல்ல அதிக வாய்ப்பிருக்கிறது. 

இதில் பும்ரா, சிராஜ் ஆகியோருடன் ஆகாஷ் தீப் அல்லது யாஷ் தயாள் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இதில் இடதுகை வேரியேஷனுக்காக யாஷ் தயாள் பிளேயிங் லெவனில் இடம்பெறவே அதிக வாய்ப்பிருக்கிறது. ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் சுழற்பந்துவீச்சை பார்த்துக்கொள்வார்கள். ஜெய்ஸ்வால், கில்லும் அவ்வப்போது தேவைப்பட்டால் சுழற்பந்துவீச்சுக்கு பயன்படுத்தப்படுவார்கள். 

சிராஜ் கிடையாது…?

ஒருவேளை, இந்திய அணி 3 சுழற்பந்துவீச்சாளர்கள் – 2 வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற வியூகத்தில் களமிறங்கினால் அஸ்வின், ஜடேஜா உடன் குல்தீப் யாதவ் அல்லது அக்சர் பட்டேல் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், வேகப்பந்துவீச்சில் பும்ரா நிச்சயம் இடம்பிடித்தாலும் சிராஜின் இடம் சற்றே கேள்விக்குறியாகும். அந்த இடத்தில் சிராஜுக்கு பதில் யாஷ் தயாளே இடம்பெறுவார் எனலாம். யாஷ் தயாள் புது பந்திலும் சரி, பழைய பந்திலும் சரி நன்றாக வீசும் திறன் பெற்றுள்ளார். இடது கை வேகப்பந்துவீச்சாளர் என்பது அவருக்கு கூடுதல் சாதகத்தை அளிக்கும். எனவே, பிளேயிங் லெவனில் யாஷ் தயாள் விளையாடுவதற்கே அதிக வாய்ப்பிருக்கிறது. இந்திய அணியில் யாஷ் தயாள் அறிமுகமாக இருப்பது ஏறத்தாழ உறுதியாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.