கேரளாவில் நிபா வைரஸ் பரவல்; தொடர்புடையோர் பட்டியலில் 175 பேர்

மலப்புரம்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் 24 வயது வாலிபருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 9-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு வந்திருந்த அவருடன் தொடர்பில் இருந்த அவரது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதில் 5 பேருக்கு லேசான காய்ச்சல் அறிகுறிகள் உள்ளன. அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கேரள சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறும்போது, மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரசின் பரவலுடன் தொடர்புடைய நபர்களின் பட்டியலில் 175 பேர் உள்ளனர். இவற்றில் 74 பேர் சுகாதார நல பணியாளர்கள் என்றார். மொத்தம் 126 பேர் முதன்மை தொடர்பு பட்டியலில் உள்ளனர். 49 பேர் இரண்டாம் நிலை தொடர்பு பட்டியலில் உள்ளனர்.

இந்த முதன்மை தொடர்பு பட்டியலில் உள்ளவர்களில் 104 பேர் அதிக ஆபத்து பிரிவில் உள்ளவர்கள் என வகைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த தொடர்பு பட்டியலில் உள்ளவர்களில் 10 பேர் மஞ்சேரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 தனி நபர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அவற்றின் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு மே 19-ந்தேதி கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு பதிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு ஜூன் 1-ந்தேதி உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையின்படி கேரளாவில் 18 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது என்றும் அவர்களில் 17 பேர் உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.