வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில்உள்ள கோல்ஃப் மைதானத்துக்கு விளையாட சென்ற அதிபர் வேட்பாளர் ட்ரம்ப்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும் களத்தில் உள்ளனர்.இந்நிலையில், அதிபர் வேட்பாளர் டிரம்ப், கோல்ஃப் விளையாடுவதற்காக புளோரிடா மாநிலம் வெஸ்ட் பாம் பீச் நகரில் உள்ள சர்வதேச கோல்ஃப் மைதானத்துக்கு கடந்த 15-ம் தேதி சென்றுள்ளார். அப்போது, அவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே, கடந்த ஜூலை 13-ம் தேதி பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தின்போது, மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் ட்ரம்ப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.இதில், அவரது வலது காதில் காயம் ஏற்பட்டது. அந்த சம்பவத்தின்போதும் ட்ரம்ப் நூலிழையில் உயிர்தப்பினார். இந்த நிலையில், இரண்டு மாத இடைவெளியில் மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ வட்டாரங்கள் கூறியதாவது: புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச் நகரில் உள்ள சர்வதேச கோல்ஃப் மைதானத்தின் புதரில் மறைந்திருந்த நபர் 275 முதல்455 மீட்டர் தொலைவில் இருந்தட்ரம்ப்பை குறிவைத்து துப்பாக்கியால்சுட்டுள்ளார். தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து, பாதுகாப்பு வேலியில்தொங்கிக் கொண்டிருந்த 2 பைகள், ஏகே-47 துப்பாக்கி, தொலைநோக்கி, சாகச காட்சிகளை பட மெடுக்கக்கூடிய அதிநவீன‘கோ-புரோ’ கேமரா ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு எஃப்பிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
துப்பாக்கியால் சுட்டதும், ரகசிய சேவை பிரிவு அதிகாரிகள் தன்னை நோக்கி வருவதை அறிந்த சந்தேகத்துக்குரிய அந்த நபர் புதர் மறைவில் இருந்து ஓடி, கருப்பு நிற காரில் ஏறி தப்பி சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், மார்ட்டின் கவுன்ட்டி பகுதியில் அந்த காரை அதிகாரிகள் சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தினர். காரில் இருந்து பிடிபட்ட நபரின் பெயர் ரியான் வெஸ்லி ரூத் (58) என்பது தெரியவந்தது. அவரது சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்போது, ‘ரஷ்யாவுக்கு எதிராக போரிட வெளிநாட்டு வீரர்கள், உக்ரைனுக்கு செல்ல வேண்டும்’ என ரூத் அழைப்பு விடுத்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், கடந்த 2002-ம் ஆண்டில் பயங்கர சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஆயுதத்தை வைத்திருந்த குற்றத்துக்காக ரியான் வெஸ்லி ரூத் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த வெஸ்லி ரூத்?– ட்ரம்ப் மீதான தாக்குதலை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள வெஸ்லி ரூத், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ளார். வடக்கு கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர். அரசியல் கட்சிகளுடன் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் தனது வாக்கை கடைசியாக ஆளும் ஜனநாயக கட்சிக்கு செலுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘‘என்னை போன்ற வாக்காளர்களுக்கு ட்ரம்ப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளார் . அது நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது’ என்று எக்ஸ் தளத்தில் ரூத் பதிவிட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதற்கிடையே, கோல்ஃப் மைதானத்துக்கு வெளியே 2 நபர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. ட்ரம்ப்பை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதுகுறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.