விராட் கோலியிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது இதுதான் – இந்திய இளம் வீரர்

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமான சர்பராஸ் கான் நீண்ட போராட்டத்திற்கு பின் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமானார். ரஞ்சிக் கோப்பையில் சமீபத்திய வருடங்களாக தொடர்ந்து பெரிய ரன்கள் குவித்த அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது புஜாரா சீனியர்களை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சர்பாரஸ் கான், துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.

அந்த வாய்ப்பில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகம் ஆன முதல் டெஸ்ட் தொடரிலேயே 3 அரைசதங்கள் அடித்த சர்பராஸ் கான் தேர்வுக்குழுவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். அதனால் அவர் வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விளையாடவில்லை. எனவே வங்காளதேச டெஸ்ட் தொடரில் விராட் கோலியுடன் இந்திய அணியின் உடைமாற்றும் அறையை பகிர்ந்து கொள்ள ஆர்வத்துடன் இருப்பதாக சர்பராஸ் கான் கூறியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியில் 45 ரன்கள் அடித்தபோது விராட் கோலி தமக்கு தலைவணங்கியதை மறக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் காதில் வாங்காமல் தொடர்ந்து கடினமாக உழைத்து சிறப்பாக விளையாட வேண்டும் என்ற விஷயங்களை விராட் கோலியிடம் கற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் சர்பராஸ் கான் பேசியது பின்வருமாறு:- “விராட் கோலியின் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு பொருத்த முடியாதது. அவரைப் போல எல்லோர் முன்னிலையிலும் நேர்மறையாக நின்று பேசும் அளவுக்கு தைரியமாக இருப்பதும் மறுநாளே அதை செயலில் வழங்குவதும் ஒரு தனித்துவமான திறமையாகும். அவரை முதல் முறையாக சின்னசாமி மைதானத்தில் பார்த்தேன். அங்கே ஒரு போட்டியில் நான் 21 பந்துகளில் 45 ரன்கள் அடித்தபோது அவர் எனக்கு தலை வணங்கினார்.

வருங்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் அவருடன் இந்திய அணியில் உடை மாற்றும் அறையை பகிர்ந்து கொள்வது என் கனவாகும். விராட் கோலி எப்போதும் தன்னுடைய ஆட்டத்தில் தெளிவாக இருப்பார். ஒரு வீரர் செய்ய வேண்டிய பணியை தொடர்ந்து செய்தால் விமர்சனம் அல்லது பாராட்டு உங்களை பாதிக்காது என்பது அவருக்கு தெரியும். இது என் வேலை இதை காலை மதியம் மாலை நேரங்களில் செய்துவிட்டு குறிப்பிட்ட நேரத்தில் தூங்க வேண்டும் என்பதை விராட் கோலி சரியாக செய்வார். அதைத்தான் அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டுள்ளேன்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.