டெல்லியின் புதிய முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் அதிஷி மர்லேனா.
புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் இருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செப்டம்பர் 13-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து செப்டம்பர் 15-ம் தேதி ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் போதுதான் முதலமைச்சர் நாற்காலியில் மீண்டும் அமர்வேன் என்று சூளுரைத்துப் பேசியிருந்தார். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்த முதல்வர் பொறுப்பிற்கு யாரை கை காட்டப் போகிறார் என்பது டெல்லி அரசியலில் பெரும் பேசுபொருளாக இருந்தது.
அதிஷியின் டெல்லி பள்ளி மாடல்!
இந்நிலையில் தற்போது, டெல்லி அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வரும் அதிஷி மர்லேனாவை டெல்லியின் புதிய முதலமைச்சராக முன்மொழிந்துள்ளார். மேலும், டெல்லி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் அதிஷி. இந்தியா முழுவதும் பேசப்பட்ட ‘டெல்லி பள்ளி’ திட்டத்திற்குக் காரணமாக இருந்தவர் அதிஷி. கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோது அக்கட்சி நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டு, ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழாவிற்கு கெஜ்ரிவாலுக்குப் பதிலாக கொடியும் ஏற்றியிருந்தார். இப்படி அக்கட்சியின் முக்கிய ஆளுமையாக வளர்ந்து வந்த அதிஷியை, அக்கட்சியினர் ஒரு மனதாக முதல்வராகத் தேர்வு செய்துள்ளாதாகக் கூறப்படுகிறது.
இன்று (செப்டம்பர் 17) மாலை 4:30 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் சக்சேனாவைச் சந்தித்து தனது ராஜினமா கடிதத்தை வழங்க உள்ளார். அதன் பின்னர் அதிஷி டெல்லி முதல்வராகப் பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.
டெல்லியின் புதிய முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் அதிஷி, “என்னை முதல்வராகத் தேர்ந்தெடுத்திருக்கும் எனது குரு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நம்பி மிகப்பெரியப் பொறுப்பை கொடுத்துள்ளார். நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவள். ஒருவேளை, நான் வேறு கட்சியில் இருந்து இருந்தால் எனக்கு தேர்தலில் நிற்பதற்தான வாய்ப்புகூட கிடைத்திருக்காது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் என்னை நம்பி எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் பதவியைக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து தற்போது, முதல்வர் பொறுப்பையும் கொடுத்திருக்கிறார்.
அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு உண்மையாக இருப்பேன். முதல்வராக என்னைத் தேர்வு செய்தது மகிழ்ச்சியாக இருந்தாலும், கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்யவுள்ளார் என்பது மிகவும் வருத்தமாகவுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் டெல்லியின் முதல்வராக்குவதே எங்கள் குறிக்கோள். அந்த ஒரே இலக்குடன் தேர்தல் வரை நான் முதல்வராக தொடர்வேன். கெஜ்ரிவாலின் வழிகாட்டுதலின் படி டெல்லி மக்களைப் பாதுகாத்து ஆட்சி நடத்துவேன்” என்று பேட்டியளித்திருக்கிறார்.