“எங்களை நித்தியானந்தா இருக்கும் கைலாச நாட்டுக்கு அனுப்பிடுங்க" – ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்!

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நேற்று நடந்தது. சப்-கலெக்டர் (தெற்கு) சோம சேகர் அப்பாராவ் கோட்டாரு, மாவட்ட பதிவாளர் தயாளன், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குநர் செந்தில்குமார், பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, தொழிலாளர் துறை துணை ஆணையர் சந்திரகுமரன் மற்றும் தாசில்தார்கள், மின்துறை, பொதுப்பணித்துறை, தொழில்துறை, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமில் பெறப்பட்ட 142 மனுக்கள் மீது தொடர்புடைய துறைகள் மேற்கொண்ட நடவடிக்கை விவரங்களை ஆட்சியர் கேட்டறிந்தார்.

அதில் 75 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், பிற மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மனுக்களுக்கு விரைவில் தீர்வு காண மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில், பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து புகார் மனுக்களை அளித்தனர். இம்முகாமில் பெறப்பட்ட 125 புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைக்காக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அது தொடர்பான விவரங்களை சம்மந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிக்கும்படி அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

`30 முறை மனு அளித்தும் பலனில்லை’

இந்த முகாமில், அரியாங்குப்பம் ராதாகிருஷ்ணன் நகர் செட்டிகுளத்தில் உள்ள அரசு நிலத்தில் வசிக்கும் பொதுமக்கள் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, “அரியாங்குப்பம் செட்டிகுளத்தில் உள்ள அரசு நிலத்தில் 52 குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நாங்கள் இலவச மனைப்பட்டா கேட்டு 30 முறை ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மனைப்பட்டா தரவில்லை என்றால், எங்களுக்கு குடியுரிமையே வேண்டாம்’ என ஆவேசமாக கூறி ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஆட்சியரிடம் அளித்தனர். மேலும், `சொந்த ஊரில் எங்களை வாழ விடாவிட்டால், நித்தியானந்தா இருக்கும் கைலாசாவுக்கு அனுப்பி வைத்து விடுங்கள்’ என்று ஆதங்கத்துடன் கூறினர்.

ஆதார் கார்டு

`கைலாசாவுக்கு அனுப்பி வைத்து விடுங்கள்’

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், “ராதாகிருஷ்ணன் நகர் செட்டிகுளத்தில் உள்ள 52 குடும்பங்களில் 18 குடும்பங்களை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் காலி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். பல முறை மனு அளித்து மனைப்பட்டா கேட்டாலும், மனுக்கள் தொலைந்து விட்டதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். எங்கள் பகுதியில் சாலை விரிவாக்கத்துக்கு எடுக்கப்பட்டது போக, மீதமுள்ள இடத்தை எங்களிடம் கொடுங்கள் என்கிறோம். எங்களது கோரிக்கைக்கு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. தொகுதி எம்.எல்.ஏ மாற்று இடம் கொடுப்பதாக கூறுகிறார். 50 ஆண்டுகள் வாழ்ந்த இடத்தை விட்டுத் தர மாட்டோம். மக்களுக்காக அதிகாரிகள் வேலை செய்யவில்லை. நாங்கள் வசிக்கும் பகுதியிலேயே எங்களை வாழ விட வேண்டும். இதனை வலியுறுத்தி எங்களது குடியுரிமையை ஆட்சியரிடம் அளித்துவிட்டோம். எங்களை கைலாசா நாட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டால் சொகுசாக வாழ்வோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.