தி.மு.க-வின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியில், இந்தாண்டுக்கான பெரியார், அண்ணா, பாவேந்தர், கலைஞர், பேராசிரியர் மற்றும் ஸ்டாலின் விருதுகளுக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார். மேலும், கலைஞர் கருணாநிதி AI தொழில்நுட்பம் மூலம் தோன்றி வாழ்த்து தெரிவித்தார்.
அதையடுத்து, மேடையில் தி.மு.க பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் விழாவின் தலைமையுரையாற்றினார். அந்த உரையில் துரைமுருகன், “சுயமரியாதைக்காக போராட்டத்தை ஆரம்பித்தது திராவிட இயக்கம்தான். இந்த திராவிடம் இயக்கம்தான், இடுப்பிலிருந்த துண்டை தோலில் ஏற்றியது. நம்மை செருப்பு போட வைத்தது. நம்மை கோயிலுக்குள் நுழைய வைத்தது. அதேசமயம், இந்தி போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய நிலைக்கு நாம் வந்திருக்கிறோம்.
இந்தியாவின் வரலாற்றை திருத்தி எழுத ஒரு கமிட்டி அமைத்திருக்கிறார்கள். அதில் நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பிராமணர்கள். திமுக தனது வீரியத்தைக் காட்டவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. அதற்காக இளைஞர் பட்டாளங்களை உதயநிதி திரட்டிக்கொண்டிருக்கிறார். தலைவரே (ஸ்டாலின்), என்னைவிட நீங்கள் இளையவர்தான், ஆனால் இன்று நீங்கள் அடைந்திருக்கும் புகழ் எங்கேயோ போய்விட்டீர்கள். நீங்கள் எங்களின் ரட்சகர், தி.மு.க-வின் கர்த்தா” என்றார்.