India National Cricket Team: இந்தியா – வங்கதேசம் (India vs Bangladesh) அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் செப். 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் போட்டி (Chennai Test Match) நடைபெறுகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நீண்ட ஓய்வுக்கு பின் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பியுள்ள நிலையில், பாகிஸ்தானை வீழ்த்திய பலத்துடன் வங்கதேசம் அணி வருகை தந்துள்ளது.
2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு (World Test Championship Final 2025) தகுதிபெற இந்திய அணி ஒவ்வொரு தொடரையும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. வங்கதேசத்துடன் 2 டெஸ்ட்கள், நியூசிலாந்துடன் 3 டெஸ்ட்கள், ஆஸ்திரேலியா உடன் 5 டெஸ்ட்கள் என அடுத்த 3-4 மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகள் உள்ளன. இதில் 7-8 டெஸ்ட் போட்டிகளை வென்றே ஆக வேண்டிய நிலையில், இந்தியா உள்ளது.
மிடில் ஆர்டர் மட்டும் கேள்விக்குறி
அப்படியிருக்க, இந்த நீண்ட டெஸ்ட் சீசனின் தொடக்க புள்ளியாக இந்த சென்னை டெஸ்ட் போட்டி அமைந்துள்ளது. இந்த தொடரில் டெஸ்ட் அணிக்கான காம்பினேஷனை கண்டறிய இந்திய அணி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய அணியின் ஒப்பனர்களாக இப்போதைக்கு ரோஹித் சர்மா – யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர்தான். விராட் கோலி, ரிஷப் பண்ட், பும்ரா, சிராஜ், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் நிச்சயம் அனைத்து போட்டிகளிலும் இடம்பெறுவார்கள். அப்படியிருக்க மிடில் ஆர்டரில் சில வீரர்கள் தங்களின் இடங்களை உறுதிசெய்ய வேண்டும்.
கேஎல் ராகுல் இடம் உறுதியா?
அதிலும் டெஸ்ட் அணியில் தற்போதைக்கு சுப்மான் கில், கேஎல் ராகுல், சர்ஃபராஸ் கான் ஆகியோரின் மீது கடும் போட்டி நிலவுகிறது. சுப்மான் கில் 3ஆவது இடத்தில் உறுதியாகிவிட்டதால் 5ஆவது இடத்தில் கேஎல் ராகுல் (KL Rahul) இறங்குவாரா அல்லது சர்ஃபராஸ் கான் இறங்குவாரா என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருந்தது. இருப்பினும், சர்ஃபராஸ் கான் சேப்பாக்கத்தில் பயிற்சிக்கு வருவதற்கு பதில் துலீப் டிராபியில் விளையாட வைக்கப்பட்டார். அதாவது, கேஎல் ராகுலுக்கு பிளேயிங் லெவனில் இடம் உறுதி என்றும் ஒருவேளை அவர் சோபிக்காதபட்சத்தில் சர்ஃபராஸ் கான் உள்பட மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
ரோஹித் சர்மா செய்தியாளர் சந்திப்பு
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) கேஎல் ராகுல் குறித்தும் பேசியிருந்தார். அதில்,”கேஎல் ராகுல் எவ்வளவு தரமான வீரர் என உங்கள் அனைவருக்குமே தெரிந்திருக்கும். அதைப் பற்றி அனைவருக்குமே தெரியும். எங்கள் தரப்பில் இருந்து அவருக்கு சொல்லப்பட்ட செய்தி மிகவும் எளிமையானது.
அவர் எல்லா போட்டிகளையும் விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அவரிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேலும் அவரிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணர வேண்டியதும் எங்களது கடமையாகும்” என்றார்.