கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, கொல்கத்தாவின் போலீஸ் கமிஷனராக மனோஜ் குமார் வர்மாவை நியமித்துள்ளது. 1998-ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த இந்திய காவல் பணி அதிகாரியான வர்மா, மேற்கு வங்க சட்டம் – ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஜெனரலாக பணியாற்றி வந்தார்.
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி வேண்டி போராட்டம் நடத்தி வரும் மருத்துவ மாணவர்களுடன் திங்கள்கிழமை இரவு சந்திப்பு நடத்தியதற்கு பின்பு கோயலை கொல்கத்தா காவல் ஆணையர் பதவியில் இருந்து நீக்கும் முடிவை முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். திங்கள்கிழமை முதல்வர் கூறுகையில், “இளநிலை மருத்துவர்களின் கோரிக்கைகளை ஏற்று, கொல்கத்தாவின் போலீஸ் கமிஷனர் வினீத் குமார் கோயல் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக கூட்டத்தில் தெரிவித்தார். நாங்கள் இளநிலை மருத்துவர்களின் கோரிக்கைகளை கேட்க முயன்றோம். நாங்கள் கொல்கத்தா கமிஷனரை மாற்ற முடிவெடுத்துள்ளோம். அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார்.
சுகாதாரத் துறையில் மூன்று பேருக்கு பதிலாக 2 பேரை நீக்க ஒத்துக்கொண்டுள்ளோம். அவர்களின் 99 சதவீத கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டோம். இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? பொதுமக்கள் துயரப்படாத வகையில் இளநிலை மருத்துவர்கள் பணிக்கு திரும்புமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். போராட்டம் நடத்திய மருத்துவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. மருத்துவர்கள் பணிக்கு திரும்புமாறு நான் வேண்டிக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுகலை பயின்று வந்த மருத்துவ மாணவி, கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மருத்துவமனையின் கருத்தரங்கு மண்டபத்துக்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு நீதி கேட்டும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாதவாறு பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீர் குமார் கோயலை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை வழக்கை கையாண்டதற்காக அவர் மிகவும் விமர்சிக்கப்பட்டார். கராக்பூர் ஐஐடி மற்றும் கான்பூர் ஐஐடியின் முன்னாள் மாணவரான கோயல் கொல்கத்தா காவல் துறையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். கோயல் தற்போது சிறப்பு அதிரடிப் படையின் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.